நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம்
மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காரணம் போலந்தின் நீதிமன்றம் அரசியல் கலக்காமல் நீதி பரிபாலிக்கும் என்ற நம்பிக்கையின்மையாகும்.
நெதர்லாந்தின் நீதிமன்றம் எடுக்கும் இந்த முடிவின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே நிலவும் நீதிபரிபாலிப்பது சம்பந்தமான கூட்டுறவு சர்ச்சைக்கு உள்ளாகிறது. மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் போலந்துக்குமான உறவிலும் கேள்விக்குறி எழுகின்றது. பொதுவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குற்றஞ்ச்செய்தவரை இன்னொரு ஒன்றிய நாடு அந்த நாட்டிடம் ஒப்படைப்பது சாதாரணமான வழக்கமாகும். நெதர்லாந்து போன்ற முடிவுகளை ஜேர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகளும் போலந்துக்கு எதிராக எடுத்திருக்கின்றன.
போலந்து அரசு நாட்டின் நீதிமன்றங்களின் முடிவுகளில் குறுக்கிட்டு நீதிபதிகளை அரசாங்கத்துக்கு ஆதரவாக முடிவுகள் எடுக்கும்படி திணிப்பதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் பல தடவைகள் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் போலந்து அரசு தனது கட்சியின் கோட்பாட்டுக்கு இணங்கும் முடிவுகள் எடுக்க மறுக்கும் நீதிபதிகளைப் பதவியிறக்கியும் வருகிறது.
நெதர்லாந்தின் இந்த முடிவு ஒரு பக்கம் போலந்து அரசு தனது நடவடிக்கைகளை மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளலாம். அதே சமயம் போலந்தின் குற்றவாளிகள் ஒளித்திருக்க நெதர்லாந்து ஒரு வாசஸ்தலமாகவும் ஆகிவிடலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்