போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும்.
தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக் குறைப்பதற்காக அந்த நாடுகள் எடுத்த முடிவுகளின் விளைவாக வாகனங்களில் பாவிக்கப்படும் சக்தியும் மாற்றமடைகிறது.
ஜெர்மனியின் வொக்ஸ்வாகன் நிறுவனம் 2026 இல் தனது தனியார் வாகனங்களெல்லாம் மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்கும் என்று அறிவித்தது. 70 புதிய வகை மின்சாரத் தனியார் வாகனங்களைத் தாம் தயாரிக்கவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதற்கும் முன்னதாக அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தமது தனியார் வாகனங்கள் அனைத்தும் 2035 இல் மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்குமென்று அறிவித்துவிட்டது.
தற்போது போர்ட் நிறுவனம் 2030 இல் தாம் தயாரிக்கும் தனியார் வாகனங்கள் அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறது. அதற்காக ஜேர்மனியிலிருக்கும் கொலோன் நகரத்துத் தொழிற்சாலையில் 1 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும். தொடர்ந்து 2025 வரை 15 பில்லியன் டொலர்களாக முதலீடுகள் அதிகரிக்கப்படும்.
போர்ட் தனது மின்சார வாகனங்களுக்காக வொக்ஸ்வாகன் நிறுவனத்தின் இயந்திரத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகப் பயன்படுத்தவிருக்கிறது. வொக்ஸ்வாகன் நிறுவனம் மின்சார வாகன ஆராய்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகியவைக்காக போர்ட்டை விட மிகப் பெருமளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது. எனவே அவைகளை அடிப்படையாகக் கொள்வதன் மூலம் மிகவும் செலவுகளைக் குறைத்துத் தரமான மின்சார வாகனங்களைச் சந்தைக்குக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
2023 இல் முதல் கட்ட மின்சார வாகனங்கள் சர்வதேசச் சந்தைக்கு வரவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்