ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் புனித முழுக்குப் பாரம்பரியத்தை மாற்றக் கோருகிறார்கள்.
பெப்ரவரி முதலாம் திகதி ரூமேனியாவின் சுச்சயேவா நகரில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையொன்று ஒரு பாதிரியாரால் புனித முழுக்குக் கொடுக்கப்படும் போது மூச்சு முட்டி உயிரிழந்தது. அதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் அவ்விடயத்தால் 60,000 கையெழுத்துக்களைச் சேகரித்து புனித முழுக்கை வேறு வழியில் செய்யும்படி கோருகிறார்கள் ஒரு குழுவினர்.
கத்தோலிக்கப் புனித முழுக்கின்போது பாதிரியார் குழந்தைக்கு ஒரு சிறிய ஏதனத்திலிருக்கும் நீரையெடுத்துத் தலையைக் கழுவுவது பாரம்பரியம். ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவ முறைப்படி ஒரளவு ஆழமான தொட்டியில் நீரை நிறைத்து அதற்குள் குழந்தையை முழுசாக முக்கியெடுப்பார் பாதிரியார்.
முழுசாக முக்கியெடுக்கும் சந்தர்ப்பத்தில் மூச்சுவழிக்குள் நீர்த்துளி போனதால் அந்த ருமேனியக் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது. குறிப்பிட்ட பாதிரியார் தேவாலயத்தின் பணிகளிலிருந்து தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஒரு கம்யூனிஸ்ட் நாடாக ஆளப்பட்ட ருமேனியாவில் புனித முழுக்கு வழக்கத்தையே மாற்றச்சொல்லி ஒரு குழு கேட்டுக்கொள்ள, அத்திருச்சபையின் பழமைவாதிகளிடையே எதையும் மாற்றக்கூடாதென்ற கருத்தே நிலவுகிறது. எனப்படும் தலைமைக்குரு [பற்றியார்க்] “விசுவாசமில்லாதவர்கள் எங்களது நம்பிக்கைகளிலும், பாரம்பரியங்களிலும் நுழைய அனுமதிக்கலாகாது,” என்கிறார். அவர் அரசின் கொவிட் 19 கட்டுப்பாடுகளை எதிர்த்தவரும் தடுப்பு மருந்து பெறக்கூடாதென்று மக்களை ஊக்குவிப்பவருமாகும்.
ருமேனியாவின் ஓர்த்தடொக்ஸ் திருச்சபைக்குள் “குழந்தையை முழுசாக முக்கவைக்காமலிருக்கும் பாரம்பரியம் ஏற்றுக்கொள்ளப்பட்டதே,” என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அல்லது, பாதிரியார் குழந்தையின், மூக்கு, காது, வாய் ஆகியவற்றை ஒரு கணத்தில் மிகச்சிறு நேரத்தில் மட்டும் பொத்திக்கொண்டு வழமைபோன்ற புனித முழுக்கைக் கொடுக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்