பிரிட்டனில் ஊபர் சாரதிகள் தனியார் நிறுவனமல்ல, ஊபர் நிறுவனத் தொழிலாளிகளே என்கிறது பிரிட்டிஷ் நீதிமன்றம்.
பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் வாடகைக்கார் நிறுவனச் சாரதிகளுக்கு ஒரு வெற்றியாகும். பிரிட்டன் முழுவதும் சுமார் 65,000 சாரதிகளைப் பணிக்கமர்த்தியிருக்கும் ஊபருக்காக லண்டனில் மட்டும் 45,000 சாரதிகள் வாடகை வண்டிகளை ஓட்டுகிறார்கள்.
ஊபர் சாரதிகள் அந்த நிறுவனத்தின் தொழிலாளிகள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு பிரிட்டன் சட்டப்படி தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் எல்லாம் கொடுக்கப்படவேண்டும். அதாவது, அச்சாரதிகள் ஊபருக்காக வண்டியோட்டும்போது அந்த நிறுவனம் அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டும்.
ஊபர் தொழிலாளிகள் பிரிட்டிஷ் அரசின் “ஆகக்குறைந்த சம்பளம்” பெறுவது முதல் அவர்களுக்கான சட்டப்படியான வருடத்துக்கான விடுமுறைகளும் கொடுக்கவேண்டும். பாதுகாப்பு, வேலைத்தள வசதிகள் எல்லாவற்றையும் செய்துகொடுக்கவேண்டும்.
எந்தெந்தச் சேவைகளில் சாரதிகள் ஈடுபடலாம், அவைகளுக்கான விலைகள் என்ன என்பது முதல் ஊபர் தனது சாரதிகளின் வேலைகளுக்கான எல்லைகளை வகுத்திருக்கிறது. இப்படியான நிலையில் ஊபர் தான் அத்தொழிலாளிகளுக்குப் பொறுப்பு என்கிறது பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றம்.
இதேபோன்ற வழக்கொன்றில் 2016 இல் ஊபர் “நாம் எமது சாரதிகளுக்கான தொழில்நுட்ப அமைப்பைச் செய்கிறோம், அவர்கள்தான் சேவைகளைப் பற்றிய முடிவுகளை எடுக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தது.
ஊபரின் 25 தொழிலாளர்களே உச்ச நீதிமன்றத்தின் வழக்குக்குப் பொறுப்பானவர்கள். இத்தீர்ப்பின் பின்னர் ஊபர் தாம் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறது. அத்துடன் தாம் தம்மிடம் வேலை செய்யும் சகல தொழிலார்களுடனும் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்