நிரந்தரமாக பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள் ஹரியும், மேகனும்.
“ஹரியும், மேகனும் எடுத்திருக்கும் முடிவினால் நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம். எனினும் அவர்களிருவரும் எங்கள் பேரன்புக்குரிய குடும்ப அங்கத்தவர்களாக என்றென்றும் விளங்குவார்கள்,” என்று பிரிட்டிஷ் அரச குடும்பம், விலகிக்கொள்ளும் தம்பதிகளைப் பற்றி அறிக்கை விட்டிருக்கிறது.
2020 இன் ஆரம்பத்திலேயே ஹரி-மேகன் தம்பதி பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கான தமது பொறுப்புக்களிலிருந்து ஓரளவு விலக ஆரம்பித்தார்கள். அதனால், அரசகுடும்பத்தினரிடையே அதை எப்படி ஏற்ற்குக்கொள்வது என்பது பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. “முழுவதுமாக அரசகுடும்பப் பொறுப்புக்களில் இருக்கவேண்டும், அல்லது முழுவதுமாக விலகிக்கொள்ளவேண்டும்,” என்ற நிலபரத்தில் எலிசபெத் மகாராணியின் சம்மதத்துடன் ஹரி – மேகன் தம்பதிகள் படிப்படியாக முழுவதுமாகச் சுயமாகத் தமது வாழ்க்கையை நிர்ணயித்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப்போது அவர்களுடைய நிலைமை மாறியிருக்கிறது. இதன் மூலம் ஹரி தன்னிடமிருக்கும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரங்களை இழப்பார். ஹரி – மேகன் தம்பதிகள் இதுபற்றி மிகவும் தெளிவாகவே இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒரு சுயமான வாழ்க்கையை வாழ்வதற்காக அவர்கள் வெவ்வேறு திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காகச் சில தொடர்களை எடுப்பது பற்றி மேகன் ஆலோசித்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார். தமது சொந்த வீட்டில் அமெரிக்காவில் வாழும் தம்பதிகள் தற்போது தமது இரண்டாவது குழந்தைப்பிறப்பை எதிர்பார்க்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்