இஸ்ராயேலின் மத்தியதரைக்கடற்கரையெங்கும் கரியெண்ணை ஆக்கிரமித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப் பெரியதாகக் குறிப்பிடப்படும் சுற்றுப்புற சூழல் மாசு இதுதான் என்று கணிக்கப்படுகிறது. நாட்டின் பிரபலமான பொழுதுபோக்குப் பிராந்தியமான மத்தியதரைக்கடற்கரையெங்கும் அது கறுப்புக் கட்டிகளாகப் பரந்து கிடப்பதைக் காணமுடிவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள் அது என்பதால் இஸ்ராயேல் தனது குடிமக்களைக் கடற்கரைப்பக்கம் தலைகாட்டவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறது. அவற்றைக் கடற்கரையிலிருந்து அகற்றும் பணியில் பல நூறுபேர் இறங்கியிருக்கிறார்கள்.
அப்பிராந்தியத்தில் தற்போது குளிரான காலநிலை நிலவுகிறது. அதனால் அவை தொடர்ந்தும் கட்டிகளாகக் கிடக்கின்றன. விரைவில் அங்கே வெம்மைக்காலம் வரும்போது அவை ஆவியாகும். அது சுவாசிப்பதற்கு நஞ்சாகும் என்பதால் அதற்கு முன்னரே அப்பகுதியைத் துப்பரவாக்கவேண்டுமென்று திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், சுமார் 200 கி.மீ நீளக் கடற்கரையோரங்களில் பரவிக் கிடக்கும் அவற்றை அகற்ற மாதங்கள், வருடம் கூட ஆகலாமென்று எண்ணப்படுகிறது.
இச்செயலுக்குக் குற்றவாளி அங்கிருந்து சுமார் 500 கி.மீ தூரத்தில் கடலுக்குள் பயணித்த எண்ணெய்க்கப்பலாக இருக்கலாமென்று கருதப்படுகிறது. கடலுக்குள் சுமார் நூற்றுக்கணக்கான தொன் கரியெண்ணெய் சிந்தியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. பெப்ரவரி 11 ம் திகதியளவில் அங்கே பயணித்த குறிப்பிட்ட கப்பலைத் தேடி செயற்கைக்கோள் படங்கள் ஆராயப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்