இஸ்ராயேலின் கடற்கரைகளின் சூழலை மாசுபடுத்தியிருக்கும் கரியெண்ணெய்க்குக் காரணம் கிரேக்க கப்பலா?
கடந்த வாரம் இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரையெங்கும் ஒதுங்கிய கரியெண்ணெயைக் கடலில் கொட்டியது ஒரு கிரேக்க எண்ணெய்க் கப்பல் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மினர்வா ஹெலன் என்ற மசகெண்ணெய்க் கப்பலே இஸ்ராயேலியக் கடலுக்கு வெளியே அந்தச் சமயத்தில் பயணித்தது என்பதைச் செயற்கைக் கோள்கள் மூலம் கண்டறிந்து வழக்குத் தொடர்ந்திருக்கிறது இஸ்ராயேல்.
எகிப்தியத் துறைமுகமொன்றிலிருந்து பெப்ரவரி 11ம் திகதி இஸ்ராயேலை நோக்கிப் புறப்பட்ட மினர்வா ஹெல்னிலிருந்து, வழியில் எண்ணெயைச் சர்வதேசக் கடலில் கொட்ட ஆரம்பித்தது. அதனாலோ என்னவோ கப்பல் மீண்டும் திரும்பி எகிப்தியத் துறைமுகத்துக்குப் போனது. அக்கப்பல் தற்போது ஸ்பானியத் துறைமுகமொன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மினர்வா ஹெலன் கப்பல் நிறுவனம் தமது கப்பலிலிருந்து எண்ணெய் கடலில் கொட்டப்படவில்லை என்று அறிவிக்கிறார்கள். இதே கப்பல் 2008 இல் டென்மார்க் கடலையடுத்தும் இதே போன்ற சூழல் நாசத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதையும் அக்கப்பல் நிறுவனம் மறுக்கிறது.
சூழல் மாசுபட்டிருக்கும் நாட்டின் 170 கி.மீற்றர் கடற்கரையைத் துப்பரவு செய்வதற்காகச் சுமார் 13.7 மில்லியன் டொலர்களை இஸ்ராயேல் பாராளுமன்றம் ஒதுக்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்