வழக்கத்துக்கு மாறான வெப்பமான காலநிலை உறைந்த குளங்கள் மீது செல்பவர்களைப் பலியெடுக்கிறது.
சாதாரணமான உறைபனிக்காலத்தைவிட நாலைந்து வாரங்களுக்கு முதலே இவ்வருடம் சுவீடன் நாட்டின் பெரும் பாகங்களில் வெம்மை பரவத் தொடங்கியிருக்கிறது. அதன் தாக்குதல் உறைந்திருக்கும் நீர் நிலைகளின் மீது படர்ந்திருக்கும் உறைபனியை ஆங்காங்கே உருகவைப்பதை அறியாமல் அதன் மேல் போகிறவர்கள் உள்ளே விழுந்துவிடுகிறார்கள்.
கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் உறைந்த குளங்களின் மீது பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்காகவோ, நடப்பதற்காகவோ சென்றவர்களில் இரண்டு டசினுக்கும் அதிகமானோர் உள்ளே விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இறந்தவர்கள் தொகை இதுவரை எட்டுப் பேர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடக் காலநிலை இதுபோன்ற ஆபத்துக்களை உண்டாக்கலாமென்ற அனுமானத்துடன் சுவீடன் நாட்டின் பனிக்கால மீட்புப்படை தனது கண்காணிப்புக்களை ஒரு மாதத்துக்கு முன்னரே கணிசமாக அதிகரித்திருந்தது. அதனால், உடனடியாக மீட்பு விமானத்தில் மருத்துவசாலைகளுக்கு எடுத்துச் சென்று உதவியதில் பலர் தப்பியிருக்கிறார்கள்.
இறந்தவர்கள், காப்பாற்றப்பட்டவர்களெல்லோருமே இதேபோன்று உறைபனி விளையாட்டுக்களில் பழக்கமானவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே நீர் நிலைகள் உறைந்திருக்கும்போது அந்தந்தப் பிராந்தியங்களில் அந்த உறைபனித் தளம் நம்பத்தகுந்ததா என்பதைப் பரிசீலித்து அறிவிப்பதுண்டு. ‘இவ்வருடக் காலநிலையில் பலமாக இருக்கும் உறைபனித் தளத்தையும் நம்பாதீர்கள், ஏமாற்றப்படுவீர்கள் என்று நாட்டின் மீட்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்