நைல் நதியையடுத்து சூடானில் கண்டுபிடிக்கப்பட்ட “ஜபெல் சஹாபா” என்ற உலகின் மிகப்பழைய போர் மைதானம்.
சுமார் 61 பேரின் எலும்புகள், பகுதிகளைக் கொண்ட ஜபெல் சஹாபா என்று குறிப்பிடப்படும் இடம் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 13,000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இறந்ததாகக் கணிப்பிடப்பட்டதுடன் அவர்களின் இறப்புகளுக்குக் காரணம் போர் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டார்கள். எனவே அதுவே உலகில் மனிதர்களுக்கிடையே போர் நடந்ததற்கான மிகப்பழைய ஆதாரமாகும்.
போரினால்தான் அவர்கள் இறந்திருக்கிறார்கள் என்று அன்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அந்தப் போரில் மட்டும்தான் பங்குபற்றியிருந்தார்களா என்று அறிந்திருக்கவில்லை. மேலும் அவைபற்றி அறிந்துகொள்ள அந்த எலும்புகளை மீண்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதன் மூலம் புதிய விபரங்களை அவர்கள் இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
இறந்துபோயிருந்தவர்களின் எலும்புகளில் அவ்விறப்புக்கு முன்னரே ஏற்பட்டிருந்த பாதிப்புக்களையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவைகளும் வெவ்வேறு சமயத்தில் போர்களில் ஈடுபட்டதால் ஏற்பட்டவையே என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சிலருக்கு ஏற்பட்ட காயங்கள் மாறியபின்னர் புதிய காயங்கள் ஏற்பட்டிருப்பதையும் எலும்புகளில் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே போர் அப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கிடையே மீண்டும், மீண்டும் ஏற்பட்டிருப்பதை அனுமானிக்க முடிகிறது.
சூடானில், நைல் நதியை அடுத்துள்ள அப்பிராந்தியத்தில் அந்தச் சமயத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் அந்த மனிதர்களுக்கான இயற்கை வளங்களில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்