தீயணைப்பு, அம்புலன்ஸ் அவசர சேவை இலக்கங்கள் பல பகுதிகளில் செயலிழப்பு.
பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் ( Les numéros d’urgence) நேற்றுமாலை முதல் செயலிழந்துள்ளன. பராமரிப்பு வேலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள்காரணமாகவே சேவைகள் தடைப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலீஸ், தீயணைப்பு, அவசர மருத்துவசேவை (Samu, pompiers, police) ஆகியவற்றுக்கு அழைக்கும் 15, 17,18,112 போன்ற இலக்கங்களே செயலிழந்துள்ளன. சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள மாவட்டங்களுக்கு மாற்று தொலைபேசி இலக்கங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.
அவசர இலக்கங்கள் செயலிழந்தமைக்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வெளியான தகவல்களைஅமைச்சு மறுத்துள்ளது. ஒரேஞ்(Orange) தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை நிறுவனமே அவசர இலக்கத் தொடர்புகளை வழங்கி வருகிறது.
ருனீசியா நாட்டுக்கு விஜயம்செய்துள்ள உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு பொறுப்பான Cédric O ஆகியோர் அங்கிருந்து அவசரமாகப் பாரிஸ் திரும்புகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சில் காலை நெருக்கடிகால உள்ளக அமைச்சுக் கூட்டம் நடைபெற்றது.
குமாரதாஸன். பாரிஸ்.