பிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை. சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை. மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டுச் சாவு.
மரணங்கள் எவ்வளவுதான் மலிந்தாலும் ஒரு நோயாளியை அவர் விருப்பப்படி சாகவிடுவதற்கு சட்டங்களில் இடமில்லை.
தனக்கு மரணத்தைப் பரிசளிக்குமாறு பிரான்ஸின் அரசுத் தலைவரைக் கேட்டு நீண்ட காலம் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நோயாளி ஒருவர், சுவிற்சர் லாந்து சென்று அந்நாட்டின் சட்டங்களின் கீழ் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.
சுவிஸ் பேர்ணில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று நிகழ்ந்த அவரது மரணம் குணப்படுத்த முடியாத தீவிர நோய்களால் துன்புறுவோருக்கு மரணத்தின் மூலம் விடுதலை கொடுக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டு வருகின்ற கோரிக் கைகள் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது.
பிரான்ஸில் சாகவதற்கான உரிமை கோரி போராடும் ஒரு தீவிர செயற்பாட்டாளர் அலெய்ன் கோக்.குணப்படுத்த முடியாத கொடிய நோய் ஒன்றினால் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்தவர். வாழ் நாள் முழுவதையும் மருத்துவப் படுக்கையிலேயே கழித்தவர்.
பிரான்ஸில் இத்தகைய தீராப் பிணிகளில் (incurable disease) உழல்வோரைக் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கின்ற சட்டங்கள் எதுவும் கிடையாது. நாட்டில் கருணைக் கொலைக்கான சட்டங்களை உருவாக்கி தனது வாழ்வை முடிப்பதற்கு உதவுமாறு கேட்டு அவர் நீண்ட காலமாக அரசுத் தலைவரிடம் மன்றாடி வந்தார். அதற்காகப் பல தடவைகள் மருந்து, உணவு ஒறுப்புப் போராட்டங்களையும் நடத்தியிருந்தார்.
கடைசியாக கடந்த ஆண்டில் அதிபர் மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு- மருந்தை மறுத்து- தான் உயிர் துறக்கும் காட்சியை “பேஸ் புக்”மூலம் நேரலை செய்ய முயன்றார். ஆனால் பிரெஞ்சு மருத்துவச் சட்டங்கள் அதைத் தடுத்து விட்டன.அவரது கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததால் ஏமாற்றமடைந்த அவர் பிரான்ஸை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
வாழ்வை முடிக்கும் உரிமை, கருணைக்கொலை,மருத்துவ உதவியுடனான தற்கொலை போன்றவற்றை பிரெஞ்சுச்சட்டங்களில் உள்வாங்க வேண்டும் என்றுகோரி வந்த அவர், அதே வழிகளில் தன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு விரும்பி, சுவிட்சர்லாந்துக்கு இடம்மாறி அங்கு மருத்துவ உதவியுடனான தற்கொலை மூலம் (assisted suicide) தனது வாழ்வை முடித்துக் கொண்டார்.
இறப்பதற்கு முன்பாக அதிபர் மக்ரோ னுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் முகவரியிட்டு கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்.
“சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளகருணைக்கொலை அல்லது தற்கொலைசட்டங்கள் மூலம் எனது கண்ணியமான மரணம் நிறைவேறியதை உங்களுக்கு அறியத் தருகிறேன்” – என்று அக் கடிதத்தில் அலெய்ன் கோக் குறிப்பிட்டுள்ளார்.
கருணைக் கொலையை ஏற்கும் திருத்தம் ஒன்றைச் சட்டத்தில் இணைப்பதற்குத் தவறியதன் மூலம் அதிபர் மக்ரோனும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது துணிச்சல் இன்மையைக் வெளிக் காட்டியுள்ளனர் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மரணத்தின் மூலம் புதிய சட்டங்கள் தோன்றும் என்ற நம்பிக்கையுடன் சாகிறேன். வாழ்வை முடிக்கின்ற உரிமையை,கருணைக் கொலையை ஆதரிக்கிறாரா இல்லையா என்ற இரண்டு கேள்விகளை அதிபர் தேர்தல் வேட்பாளர்களிடம் விட்டுச் செல்கிறேன்.” -இவ்வாறு தனது கடிதத்தில் அலெய்ன் கோக் மேலும் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுவது பல நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.ஆனால் சுவிற்சர்லாந்து, கனடா, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற சில நாடுகளில்இன்னொருவரின் உதவியுடன் குறிப்பாகமருத்துவர் உதவியுடன் நோயாளி ஒருவர்தன் வாழ்வை முடிவுக்கு கொண்டுவரஇடமளிக்கின்ற சட்டங்கள் அமுலில் உள்ளன.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்.