மின்கல வாகன விற்பனையின் வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த மின்கலத் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கின்றன.
சுமார் 49 பில்லியன் டொலர் செலவில் 38 மிகப் பெரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் கட்டப்பட்டு வருகின்றன. 2029 – 2030 ஆண்டளவில் சுமார் 17 மில்லியன் மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை அந்தத் தொழிற்சாலைகள் தயாரிக்கும் என்று கணிப்பிடப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் சமீப வருடங்களில் மின்சாரக் கலத்தால் செயற்படும் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. அதற்கான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளைப் பல நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. ஆனால், அந்த வாகனங்களுக்கான மின்கலங்களின் தயாரிப்பு பெரும்பாலும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலேயே நடைபெற்று வருகின்றன.
ஆசிய நாடுகளில் மின்கலத் தேவைகளுக்காகத் தங்கியிருக்கும் நிலைமையை மாற்றுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியமும், பல ஐரோப்பிய நாடுகளும் திட்டமிட்டே பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய நிறுவனங்கள் தவிர ஆசிய நிறுவனங்களும் ஐரோப்பாவில் தமது மின்கலத் தயாரிப்பை ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இரண்டு சீன நிறுவனங்கள் போலந்திலும், ஹங்கேரியிலும் மின்கலத் தொழிற்சாலைகளைக் கட்டிவருகின்றன. ஜேர்மனியில் ஒரு சீன நிறுவனம் தனது தொழிற்சாலையைக் கட்டிவருகிறது. Northvolt என்ற சுவீடிஷ் நிறுவனம் சுவீடனில் மிகப் பெரிய ஒரு தொழிற்சாலையைக் கட்ட ஆரம்பித்திருக்கிறது. அதைத் தவிர மேலுமிரண்டு தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. அவை தவிர ஐரோப்பாவின் தனியார் வாகன நிறுவனங்களும் தம்மிடையே இணைந்து வெவ்வேறு தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் தனது பகுதியில் பாவிக்கப்படும் வாகனங்களுக்கான நச்சுக்காற்று வெளியீட்டு எல்லையை மிகவும் கடுமையாக்கியிருக்கிறது. சுற்றுப்புற சூழல் பேணல், காலநிலை மாற்றத் தடுப்பு ஆகியவைக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைகளால் வாகனத் தயாரிப்பாளர்கள் மிக வேகமாகத் தமது வாகனங்களை அதற்கேற்றபடி தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
2025 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது பிராந்தியத்தில் பாவிக்கப்படும் மின்கல வாகனங்களுக்கான மின்கலங்களில் பெரும்பான்மையானவையைத் தமது பகுதியில் தயாரிக்கக்கூடியதாக இருக்கவேண்டுமென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்