தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம்.
பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் ஒன்றான Landes பகுதியில் மட்டும் டெல்ரா எனப்படும் இந்தியத் திரிபு மிக வேகமாகப் பரவி வருகிறது
.அங்கு பத்துதொற்றாளர்களில் ஏழு பேர் டெல்ரா வைரஸ் கிருமியால் பீடிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அங்குள்ள மூதாளர் காப்பகம் ஒன்றில் முப்பது பேருக்கு டெல்ரா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில்மொத்தம் 250 பேருக்கு அந்த வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களில் 66சத வீதமானோர் தடுப்பூசி எதனையும் ஏற்றிக்கொள்ளதவர்கள். 24 வீதமானோர் ஒரு தடுப்பூசியைப் பெற்றவர்கள். 9 வீத மானோர் இரண்டு ஊசிகளையும் ஏற்றியவர்கள் என்ற தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Landes (Nouvelle-Aquitaine) மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு டெல்ரா மிக வேகமாகப் பரவுவதற்குக் காரணம் என்ன என்பதை அறிய சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகளை நேரில் மதிப்பிடுவதற்காக பிரதமர் ஜீன் காஸ்ரோவும் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரனும் வியாழக்கிழமை அங்கு நேரில் விஜயம் செய்கின்றனர்.
நாட்டில் நாளாந்த மொத்த தொற்றாளர்களில் ஒன்பது முதல் பத்து சதவீதம்டெல்ரா தொற்று அதிகரித்துள்ளது என்றதகவலை அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று வெளியிட்டார்.
ஸ்ரார்ஸ்பூ உட்பட மேலும் சில நகரங்களிலும் டெல்ரா தொற்றுக்கள் கொத்தணியாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை –
பிரான்ஸ் தனது பயணிகளுக்கான சிவப்பு பட்டியல் நாடுகளில் ரஷ்யா, சீஷெல்ஸ்(Seychelles) நமீபியா ஆகிய மூன்று நாடுகளையும் இணைத்துள்ளது. அந்த மூன்று நாடுகளிலும் வைரஸின் மாற்றமடைந்த திரிபுகள் அதிகளவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டதை அடுத்தே அவை சிவப்புப் பட்டியல் நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, ஆஜென்ரீனா, பஹ்ரைன், பங்களாதேஷ் பொலீவியா, பிறேசில் சிலி, கொலம் பியா, கோஸ்ராறிக்கா இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், பராகுவே, சிறிலங்கா, சூரிநாம், உருகுவே ஆகிய நாடுகள் ஏற்கனவே பிரான்ஸின் சிவப்புப் பட்டியலில் உள்ளன.இந்த நாடுகளில் இருந்து பிரெஞ்சுப் பிரஜைகள் மட்டுமே தகுந்த காரணங்களுடன் பிரான்ஸூக்குத் திரும்பி வருகைதர முடியும். அவர்கள் கட்டாய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
குமாரதாஸன். பாரிஸ்.