ஹங்கேரியிடம் மாட்டிக்கொண்டு திணறிய ஜேர்மனி தனது ஆதர்ச எதிரியைக் கால்பந்து மோதலில் சந்திக்கும்.
புதனன்று நடந்த நான்கு மோதல்களும் யூரோ கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை நடந்த மோதல்களில் அதி விறுவிறுப்பானவை எனலாம். போர்த்துக்கல், ஜேர்மனி, ஹங்கேரி ஆகிய மூன்று முக்கிய உதைபந்தாட்ட நாடுகளின் அணிகளில் எதுவும் போட்டிகளை விட்டே வெளியே உதைத்துத் தள்ளப்படலாம் என்ற நிலை விளையாட்டு நடந்துகொண்டிருந்த 90 நிமிடங்களில் பல தடவைகள் மாறிக்கொண்டிருந்ததே அதன் காரணம்.
E, F ஆகிய குழுக்களில் எந்தெந்த அணிகள் அடுத்த கட்டத்துக்குப் போகப்போகின்றன என்பதை நிர்ணயிப்பதாக இருந்தன மோதல்கள். E குழுவில் சுவீடனும், ஸ்பெய்னும் முன்னேறும் என்பது ஏற்கனவே அடுத்த கட்டத்துக்குத் தயாராகியிருந்ததால் அவர்கள் தத்தம் மோதல்களில் வெல்வதால் யார் குழுவில் அதிக புள்ளி எடுத்தவராகிறார் என்பது கேள்வியாக இருந்தது. சுவீடன் தனது மோதலில் போலந்துக்கெதிராக 3 – 2 வெற்றியையும் ஸ்பெய்ன் தனது மோதலில் ஸ்லோவாக்கியாவுக்கெதிராக 5 – 0 என்ற வெற்றியையும் அடைந்தன. நடந்த தத்தம் மோதல்களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்த சுவீடன் 7 புள்ளிகளால் குழுவின் முதல் இடத்தைப் பற்றியது.
F குழுவின் போட்டியில் ஹங்கேரி வெற்றிபெற்றால் அவர்களால் ஜேர்மனியை அடுத்த கட்டத்துக்குப் போகாமல் தடுத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், பலரின் எதிர்பார்ப்பையும் மீறி முதலிலேயே பந்தை வலைக்குள் போட்டது ஹங்கேரி. பதினோராவது நிமிடத்திலேயே அதைச் செய்ய ரோலாண்ட் சலாய்க்கு ஜேர்மனி 1 – 1 என்று கிம்மிஷ் பதிலளித்தபோது நிமிடம் 66 ஆகியிருந்தது.
அடுத்த இரண்டே நிமிடத்தில் ஹங்கேரியின் ஷாபர் தனது குழுவுக்கு 2 – 1 என்ற இலக்கத்தைக் கொடுத்தார். பெரும்பாலும் சவ்வு போலவே இழுப்பட்டது அந்த மோதல். ஜேர்மனி மிகவும் மெதுவாகவே விளையாடியது. 83 வது நிமிடத்தில் கோரட்ஸ்கா இலக்கத்தை 2 – 2 என்று சமன்செய்தார். மோதல் அந்த இலக்கத்திலேயே முடிவடைந்தது.
இரண்டு பக்கங்களிலிருந்தும் அடுத்தடுத்துத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்த மோதலாக பிரான்ஸ் – போர்த்துக்கல் விளையாட்டு இருந்தது. 2 – 2 என்ற இலக்கத்திலேயே அதுவும் முடிவு பெற்றது. அவற்றில் மூன்று கோல்கள் எதிர்த்தரப்பினரின் தவறால் கிடைக்கப்பட்ட தண்டனைகளிலேயே போடப்பட்டன.
முதல் தடவையாக ரொனால்டோ பிரான்ஸுக்கு எதிராக இந்த மோதலில்தான் பந்தை வலைக்குள் போட்டார். அத்துடன் தனது நாட்டுக்காக அதிக தடவைகள் பந்தை எதிராளியின் வலைக்குள் போட்டவர்களில் இதுவரை உலக சாதனை செய்திருந்த ஈரானின் அலி டேயின் இலக்கத்தை புதனன்று ரொனால்டோ கைப்பற்றினார். அந்த இலக்கத்தை அடைந்தவர்கள் இப்போது உலகில் இருவராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்