அமெரிக்கா, கனடாவின் மேற்குப் பாகங்களில் வெப்பமானி புதிய உயரங்களைத் தொடுகின்றன.
கனடாவில் வடகிழக்கிலிருக்கும் லைட்டன் [Lytton] நகரத்தில் வெப்பநிலை ஞாயிறன்று 46.6 செல்சியஸைத் [116 பாரன்ஹைட்] தொட்டு கனடாவிலேயே இதுவரை எங்கும் அளக்கப்பட்டிராத சாதனையைச் செய்தது. அந்த நகரைத் தவிர மேலும் நாற்பது கரையோர நகரங்களிலும் வெப்பநிலை என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அல்பேர்ட்டா, கொலம்பியா, யுக்கொன், சஸ்கச்சவன், வடமேற்கு பிராந்தியங்களில் தொடர்ந்தும் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கத்தை விட 10 -15 செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து 40 செல்சியஸைப் பல பிராந்தியங்கள் தொடுமென்று கனடாவின் வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது. அப்பகுதிகள் டுபாயின் வெப்பநிலையை விட அதிகமானதாகும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
அமெரிக்காவின் சீயட்டில், போர்ட்லாண்ட் நகரப்பகுதிகளும் கனடாவின் மேற்குப் பிராந்தியங்கள் போலவே திங்களன்று மிக அதிக வெப்பநிலையை அனுபவிக்கும். எனவே பாடசாலைகள் பலவற்றுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு, கொவிட் 19 தடுப்பு மையங்கள் சிலவும் மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்