மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மில்லியன் பேரை வேறுடங்களுக்குப் போகும்படி கேட்கிறது ஜப்பான்.
என்றுமே கண்டிராத அளவில் தொடரும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வீடுகள் இடிபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானின் சில பகுதிகள். ஹிரோஷிமா, கியூஷு நகரப் பகுதிகளில் வாழும் மக்களில் சுமார் இரண்டு மில்லியன் பேரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகும்படி எச்சரித்திருக்கிறது நாட்டின் வாநிலை கண்காணிப்பு மையம்.
“ஏற்கனவே பல பகுதிகளில் மோசமான அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை நாம் கண்டிராத அளவில் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. வழக்கமாக மண்சரிவுகள், வெள்ளங்கள் ஏற்படாத இடங்களிலும் இந்தப் பருவகால மழையினால் கடும் சேதங்கள் விளையுமென்று எச்சரிக்கிறோம்,” என்கிறார் வாநிலை கண்காணிப்பு மையத்தின் அதிகாரி.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏறகனவே 23 பேர் இறந்திருக்கிறார்கள், மூவரைத் தொடர்ந்தும் காணவில்லை. சனியன்று ஒருவர் வெள்ளத்தால் அடித்துப் போகப்பட்டு இறந்திருக்கிறார். சுமார் 150 இராணுவத்தினருடன், பொலீசார், தீயணைப்புப் படையினர் பாதுகாப்பு, மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் உண்டாகியிருக்கும் விளைவுகள் ஜப்பானில் முன்னரை விட அதிக மழைவீழ்ச்சியையும் அதன் பக்கவிளைவுகளான இயற்கை அழிவுகளையும் உண்டாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்