“நல்ல மேய்ப்பராக இருங்கள் அரசியல்வாதிகளாக மாறாதீர்கள்,” என்று ஜோ பைடனுக்கு தேவநற்கருணை கொடுக்க மறுக்கும் பேராயர்களுக்குச் சொன்னார் பாப்பரசர்.
அமெரிக்க அரசியலில் சமீப காலத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி. சமீபத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் அதை முழுவதுமாகத் தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெண்களின் கருக்கலைப்பு உரிமையையை ஆதரிக்கும் கத்தோலிக்கரான ஜோ பைடனுக்கும் அதே கோட்பாடுள்ள மற்றைய அரசியல்வாதிகளுக்கும் தேவநற்கருணை கொடுக்க மறுத்து வருகிறார்கள் ஒரு பகுதி பேராயர்கள்.
ஸ்லோவாக்கியாவில் சுற்றுப்பயணத்திலிருக்கும் பாப்பரசரிடம் அதுபற்றிய கருத்துக் கேட்கப்பட்டது. குறிப்பிட்ட மேற்றிராணியார்கள், பாதிரியார்மார் செய்வது சரியா, தவறா என்று தெளிவான முடிவு சொல்ல மறுத்த பாப்பரசர் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
“கத்தோலிக்க பாதிரிமார் கண்டனங்களால் மனிதர்களைச் சாடாமல் மென்மையானவர்களாகவும், இரக்கம் காட்டுகிறவர்களாகவும் கடவுள் காட்டிய வழியில் நடக்கவேண்டும்,” என்று பாப்பரசர் பிரான்சீஸ் குறிப்பிட்டார்.
அதே சமயம் பாப்பரசர் தான் கருக்கலைப்பைக் கொலை என்றே கருதுவதாகச் சுட்டிக்காட்டினார்.
சாள்ஸ் ஜெ. போமன்