பிரெஞ்சு போர் விமானங்களுக்கு அல்ஜீரிய வானில் பறக்கத் தடை! இருநாட்டு நெருக்கடி வலுக்கிறது.
பிரான்ஸுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையில் ரஜீக உறவுகளில் ஏற்பட்டிருக்கின்ற விரிசல்கள் தீவிரமடைவது தெரிகிறது.
பிரான்ஸின் ராணுவ விமானங்கள் தனதுவான் பரப்பினுள் பறப்பதற்கு அல்ஜீரியா தடைவிதித்திருக்கிறது.இதனால் ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பிரான்ஸின் போர்விமானங்கள் அல்ஜீரிய வான்பரப்பின் ஊடாகப்பறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
நேற்றுக் காலை அல்ஜீரிய வான் எல்லைக்குள் பிரவேசித்த இரண்டு விமானங்கள் தடுக்கப்பட்டன என்பதை பிரான்ஸின்ராணுவப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
பிரான்ஸின் முன்னாள் குடியேற்ற நாடாகிய அல்ஜீரியா தொடர்பில் அதிபர் மக்ரோன் வெளியிட்டிருந்த சில கருத்துக்களுக்கு ஆட்சேபம் வெளியிடும் நோக்கில் பாரிஸில் உள்ள தனது தூதரை அல்ஜீரியா திருப்பி அழைத்திருந்தது. அதன் தொடர் நடவடிக்கையாகவே தற்போது பிரான்ஸின் விமானங்களுக்கு அது தடை விதித்திருக்கிறது.
1954-1962 வரை நடைபெற்ற அல்ஜீரியப்போரை மிக நெருக்கமாக அனுபவித்த குடும்பங்களைச் சேர்ந்த பேரப் பிள்ளைளான இளையோர்கள் 18 பேரை அதிபர் மக்ரோன் சில தினங்களுக்கு முன்னர் எலிஸே மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் நட்புறவாக உரையாடியிருந்தார்.அந்தச் சந்திப்பின் போது பிரான்ஸின் முன்னாள் குடியேற்ற நாடாகிய அல்ஜீரியா தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களே இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
அல்ஜீரியாவின்”அரசியல்-இராணுவக்கட்டமைப்பு (“politico-military system”)பிரான்ஸின் வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட முந்திய பழைய வரலாற்றின் இன்னொரு வடிவமாகவே விளங்குகின்றது “-என்று அச் சந்திப்பில் மக்ரோன் கூறினார் என பிரான்ஸ் – அல்ஜீரியா ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அந்தச் சந்திப்பில்” பிரான்ஸின் காலனி ஆதிக்கத்துக்கு முன்னர் அல்ஜீரியாவில் ஒரு தேசம் இருந்ததா என்றும் மக்ரோன் கேள்வி எழுப்பியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மக்ரோனின் இந்தக் கூற்று அல்ஜீரியாவின் தற்போதைய ஆட்சியாளர்களைச் சீற்றமடையச் செய்துள்ளது. மக்ரோனின் கூற்றுக்கள் அல்ஜீரியாவின் உள் விவகாரகங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத தலையீடு என்றும், பிரான்ஸின் காலனித்துவத்துக்கு எதிராகப் போரிட்டு இறந்த அல்ஜீரியர்களுக்குச் சகிக்க முடியாத ஓர் அவமானம் என்றும் அல்ஜீரிய அதிபர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
மக்ரோன் இளையவர்களுடன் மதிய உணவு அருந்தியதுடன், அல்ஜீரியப் போர் தொடர்பான நினைவுகளையும்அவர்களோடு பகிர்ந்துகொண்டார்.அச்சமயம் கேள்விகளுக்குப் பதிலளித்தஅவர், “நாங்கள் அந்தப் போருக்குள் வாழவில்லை. ஆனால் அதன் துயரங்களையும் சுமைகளையும் தலைமுறைகடந்தும் சுமப்பவர்களாக இருக்கின்றோம்” – என்று குறிப்பிட்டார்.
அல்ஜீரியாவில் பிரான்ஸ் நடத்திய போரின் “தலைமுறை கடந்த நினைவுக் காய ங்களை” ஆற்றுவதற்கான பல முயற்சிகளை அதிபர் மக்ரோன் தான் பதவிக்கு வந்த காலம் தொடக்கம் எடுத்து வருகிறார். அல்ஜீரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுப் பிள்ளைகளுடன் அவர் எலிஸேயில் நடத்திய சந்திப்பும் அவற்றில் ஒன்றாகும்.
நாடு திருப்பி அனுப்பப்படுபவர்களைப் பொறுப்பேற்பதில் அக்கறை காட்டாத காரணத்தால் அல்ஜீரியா, மொரோக்கோதுனிசியா ஆகிய மூன்று நாடுகளினதும்பிரஜைகளுக்கு வீஸா வழங்குவதை அரைவாசியாகக் குறைக்கின்ற முடிவை அண்மையில் பிரான்ஸ் அறிவித்திருந்தது. பாரிஸின் அந்தத் தீர்மானமும் அல்ஜீரியாவுடனான அதன் உறவு நெருக்கடியில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்திருந்தது.
குமாரதாஸன். பாரிஸ்.