“நான் வென்றால் நாட்டோவின் அமெரிக்கத் தலைமையிலிருந்து விலகி ரஷ்யாவை அணுகுவேன்,” என்கிறார் லி பென்.

பத்து நாட்கள் மிச்சமிருக்கின்றன பிரான்ஸின் ஜனாதிபதி பீடத்தில் இருக்கப்போகிறவரில் மாற்றம் ஏற்படுமா என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க. எம்மனுவேல் மக்ரோனுடன் இறுதிச் சுற்றில் மோதப்போகும் மரின் லு பென் தனது ஆட்சியில் வெளிவிவகாரங்கள் எப்படியிருக்கும் என்பதை அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ, மத்திய கிழக்கு அரசியலில் அடியோடு மாற்றங்கள் செய்யப்போவதாகக் குறிப்பிட்டு, அதற்கான காரணம் பிரான்ஸ் அரசியல் பிரெஞ்சுக்காரர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும், என்கிறார்.

“‘தனது அங்கத்துவ நாடுகளின் சுய நிர்ணய உரிமைகளில் குறுக்கிடும் ஒன்றியத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் நாம் ஒன்றியத்தின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டதற்காக ஒவ்வொரு நாடும் அவற்றை எப்போதுமே அனுசரிக்கவேண்டும் என்பது பிரான்ஸின் சட்டங்களுக்கு முரணானI து,” என்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கெதிராகச் சாட்டையை விளாசினார் மரின் லு பென். தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நாடாக இருக்கும் பிரான்ஸ் அவ்விடயத்தில் மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டோ அங்கத்துவத்தைப் பொறுத்தவரை அவர் அமெரிக்காவின் தலைமையிலான நாட்டோவின் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார். உக்ரேன் மீதான போர் முடிந்ததும் ரஷ்யாவுடன் நாட்டோ நட்புக்கொண்டாடவேண்டும் என்றார். 

ஜேர்மனியுடன் பாதுகாப்புத் தொழில்நுட்பம் தயாரிப்பு ஆகிய துறைகளில் பிரான்ஸ் கொண்டிருக்கும் நெருங்கிய தொடர்புகளை முறித்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்ட அவர் அவைகள் பிரான்சுக்கு ஆதாயமானவையல்ல என்று குறிப்பிட்டார்.

சிரியாவின் அல் ஆஸாத் அரசுடன் தொடர்புகளை முறித்துக்கொண்டது தவறான வெளிநாட்டுக் கொள்கை என்று குற்றஞ்சாட்டிய லி பென் தான் வெற்றிபெறும் பட்சத்தில் அத்தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *