தாம் நொறுக்கிய பாமியான் புத்தர் சிலை இருந்த இடத்தைத் தலிபான்கள் சுற்றுலாத் தலமாக்கினார்கள்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முன்பு அரசமைத்திருந்தபோது அந்த நாட்டிலிருந்த பல சரித்திரச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அவற்றில் முக்கியமானது ஒன்றாகக் கருதப்பட்டது பாமியான் பிராந்தியத்திலிருந்த 1,400 வருடப் பழமைவாய்ந்த புத்தர் சிலைகளாகும்.
இரண்டு புத்தர் சிலைகள் முறையே 170, 115 அடிகள் உயரமானவை பாமியான் பிராந்தியத்தில் நிறுவப்பட்டிருந்தன. அவைகளை 2001 ம் ஆண்டு தலிபான் ஆட்சி நடந்தபோது அன்றைய தலைவராக முல்லா ஒமாரின் உத்தரவின் மூலம் உடைத்து நொறுக்கிவிட்டார்கள். அதற்குக் காரணமாக “இஸ்லாம் சிலை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, புத்தர் சிலைகளை நொறுக்குவது முஸ்லீம்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று முல்லா ஒமார் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் அந்தப் பகுதி தனது சுற்றுலாப் பயணிகளை இழந்தது. ஆனால், புதியதாகத் தலைமையேற்றிருக்கும் தலிபான்கள் அரசு சமீபத்தில் அந்த இடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக்கியிருக்கிறது. அங்கே காவலுக்கு இருக்கும் தலிபான் அதிகாரிகளுக்கு 5 டொலர்களைக் கட்டணமாகக் கொடுத்துவிட்டு ஆப்கானிகள் அவ்விடத்துக்கு விஜயம் செய்துவருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்