தன்னைப் பிறக்க அனுமதித்த தாயின் மருத்துவரை நீதியின் முன் நிறுத்தி வென்றார் 20 வயதான ஏவி டூம்ப்ஸ்.
தன்னைக் கருத்தரிப்பதற்கு எதிராகத் தனது தாய்க்குச் சரியான ஆலோசனை கொடுக்காத மருத்துவரை ஐக்கிய ராச்சியத்தில் நீதியின் முன்னால் இழுத்து வென்றிருக்கிறார் முதுகெலும்பில் வியாதியுடன் பிறந்த ஒரு ஒரு பெண்.
ஏவி டூம்ப்ஸ் கருவிலேயே முதுகெலும்பில் பாதிப்புடன் [spina bifida] உண்டாகிப் பிறந்தவர். அதனால் பல வியாதிகளுடன், நோவுகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது கால்கள், சிறுநீர்ப்பை, குடல்களெல்லாம் அந்த வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அவர் மனம் தளராமல் இணையத்தளத்தில், சமூகவலைத்தளங்களில் எழுதுவதுடன் குதிரையேற்றப் பயிற்சி பெற்று அதில் உடல் நலிவுற்றவர்களுக்கான போட்டிகளிலும் பங்குபற்றி வருபவர்.
“வழியொன்றைக் காணுங்கள், சாக்குப்போக்கைக் கண்டுபிடியாதீர்” [find a way, not an excuse] என்ற கோஷத்துடன் சமூகத்தில் தன்னைப் போன்றவர்களையும், இளவயதினரையும் உற்சாகப்படுத்தி வருபவர் ஏவி டூம்ஸ். அதற்காக அவர் “இளவயதினரை ஊக்கப்படுத்துபவர்” என்று பாராட்டப்பட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
தனது தாய்க்கு அவரது மருத்துவர், கருவுறுவதில் அவரது குழந்தைக்கு வரக்கூடிய பிரச்சினைகளை விளக்கமாகக் குறிப்பிட்டு அறிவுறுத்தியிருப்பின் தன்னை அவர் கருத்தரித்திருக்கமாட்டார் என்பதே ஏவியின் வாதம். அவரது தாயும், “நீதிமன்றத்தில் தனது மருத்துவர் தான் கருத்தரித்தால் அக்குழந்தைக்கு என்ன உடல்கோளாறு உண்டாகும் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தான் அதை அச்சமயத்தில் தவிர்த்து வேறொரு சமயத்தில் செய்திருக்கக்கூடும். அதற்கான சரியான ஊட்டச்சத்துக்களைச் சாப்பிட்டு ஆரோக்கியமான கருத்தருப்புக்காகப் பொறுத்திருந்திருப்பேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட அந்த வழக்கில் மருத்துவர் பிலிப் மிட்சல் பெரிய தொகையொன்றை நஷ்ட ஈடாக ஏவி டூம்ப்ஸுக்குக் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பாகியிருக்கிறது. அத்தொகை என்னவென்று இதுவரை தெரியாது. ஆனால், ஏவி டூம்ப்ஸ் வாழ்வு முழுவதும் அவருடைய மருத்துவ சேவை போன்றவைக்குத் தேவையானதெல்லாவற்றையும் கணக்கிட்டு அத்தொகை தெரிவிக்கப்படும் என்று ஏவியின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்