நெய்தல் எழுத்தாளர்களுக்கு கடற்கரை விருது – 2021
நெய்தல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கடற்கரை விருது 2021 விழா 05.12.2021 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் நாகர்கோவில் ஆயர் இல்ல வளாகத்திலுள்ள CPD அரங்கில் நடைபெற்றது .
தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவில் எழுத்தாளர் சப்திகா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கடற்கரை இலக்கிய வட்ட செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் இரையுமன் சாகர் அறிமுக உரையாற்றினார் .
“ஊடகத்தின் பயனும், பங்களிப்பின் அவசியமும் ” எனும் தலைப்பில் இந்து தமிழ் திசை சிறப்பு செய்தியாளர் என்.சுவாமிநாதன் அவர்களும் ,
“ஏன் எழுத வேண்டும்? எதை எழுத வேண்டும் ?” என்கிற தலைப்பில் சூசைபுரம், புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பெருமா. செல்வ. இராசேசு அவர்களும் ,
“நெய்தல் படைப்பாளர்களும் படைப்புகளும்” எனும் தலைப்பில் தெற்கு எழுத்தாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திருத்தமிழ்த்தேவனார் அவர்களும் ,
“நெய்தல் மக்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன ?” எனும் தலைப்பில் நெய்தல் மக்கள் இயக்கம் மாவட்டச் செயலாளர் குறும்பனை சி. பெர்லின்
அவர்களும் ,
“நெய்தல் படைப்பாளர்களின் அடுத்தகட்ட நகர்வுகள்” குறித்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் அருட்பணி. டன்ஸ்டன் அவர்களும் உரை நிகழ்த்தினர்.
நாகலாந்து புனித ஜோசப் பல்கலைகழக மேனாள் துணை வேந்தர் பேரா.G.M.ஜோசப் டன்ஸ்டன் அவர்கள் “நான்காம் உலக இலக்கியத்தில் நெய்தல் படைப்பாளர்கள்” எனும் தலைப்பில்
சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் மாநில அளவில் நடத்தப்பட்ட சிறுகதை , கவிதை , கட்டுரை , ஓவியம் , புகைப்படம் , குறும்படம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு கேடயம், சான்றிதழ் , மற்றும் ரொக்கத் தொகை போன்றவை வழங்கப்பட்டது . தொடர்ந்து 2020 ல் வெளிவந்த நெய்தல் நூல்களில் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது . சிறந்த கவிதை நூலாக கவிஞர் விஜய் சேசுலா எழுதிய “உயிருள்ளவரை” நூலுக்கும், சிறந்த நாவலாக அருள் எழுதிய “தண்ணீருக்காக” நூலுக்கும் , சிறந்த கட்டுரை நூலாக பேராசிரியர் ஜே.எம்.ஏ. இராசேந்திரன் அவர்கள் எழுதிய “பாரதிய ஜனதா கட்சி வீழ்த்த முடியாத கட்சியா ? ” நூலுக்கும் , சிறப்பு விருதாக குறும்பனை சி . பெர்லின் எழுதிய “நெய்தல் சொல்லகராதி” நூலுக்கும் விருதுகளும் , சான்றிதழ் மற்றும் ரொக்க தொகையும் வழங்கப்பட்டது.
விழாவில் நாகலாந்து புனித ஜோசப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜோசப் டன்ஸ்டன், எழுத்தாளர் குறும்பனை பெர்லின் ஆகியோருக்கு தமிழ்வானம் சுரேஷ் நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியை முனைவர். ஆன்சி மோள் ஒருங்கிணைப்பு செய்தார் . கடற்கரை இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர்
இரையுமன் சாகர் அவர்கள் நன்றியுரையாற்றினார் . விழாவில் கன்னியாகுமரி , நெல்லை ,
தூத்துக்குடியை சார்ந்த இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எழுதுவது; தமிழ்வானம் சுரேஷ்