ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கியைத் தண்டித்த அமெரிக்கா அதையே செய்யும் இந்தியாவைத் தண்டிக்கத் துணியுமா?

ஆறு மாதங்களுக்கும் அதிகமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத ரஷ்ய ஜனாதிபதி திங்களன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். ரஷ்யாவிடம் கொள்வனவு செய்த 5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களில் ஒரு பகுதி இந்தியாவுக்கு வந்திறங்கியிருக்கிறது.

திங்களன்று இந்தியாவில் இறங்கும் புத்தின் சுற்றுப்பயணத்தின் போது மோடியுடன் மேலும் அதிக ஒப்பந்தங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இந்தியா தனது ஆயுதங்கள் கொள்வனவை ரஷ்யாவிடமே செய்யும்போது ரஷ்யா தனது கொள்வனவைச் சுமார் 56 – 72 விகிதத்தினால் குறைத்துக்கொண்டிருக்கிறது.

தனது நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் ஆயுதக்க் கொள்வனவுகளைச் செய்வதை அமெரிக்கா விரும்புவதில்லை. தனது நாட்டோ – நட்பான துருக்கி ரஷ்யாவிடம் நவீன ரக ஏவுகணைகளை வாங்கியதால் அதனுடன் தனது பொருளாதாரத் தொடர்புகளைக் குறைத்துத் தண்டித்து வருகிறது. அதே விதமாக ரஷ்யாவிடம் கொள்வனவு செய்த இந்தியாவைக் கண்டும் காணாமல் அமெரிக்கா ஒதுங்கும் என்று கணிக்கப்படுகிறது.

சர்வதேச அரசியலிலும், சீனக் கடல் பிரதேசத்திலும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடத் தன்னுடனிணைந்து செயற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவைப் பார்க்கிறது அமெரிக்கா. இந்தியாவைத் தவிர ஜப்பான், ஆஸ்ரேலியாவும் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போடவிருக்கின்றன.

ஏற்கனவே கொள்வனவு செய்திருப்பதை விட இந்தியா மேலும் இராணுவத் தளபாடங்களை ரஷ்யாவிடம் வாங்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அத்துடன் ரஷ்யாவின் ஆயுதங்களை இந்தியா தனது மண்ணில் தயாரிப்பதை மேலும் அதிகமாக்கும். Sukhoi Su-30,  MiG-29 , T-90 ஆகிய நவீன இராணுவ இயந்திரங்கள் அவைகளில் அடங்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்