கொரோனாக் கிருமியின் மூலம் போலவே ஒமெக்ரோன் திரிபின் மூலமும் கேள்விக்குறியாகி வருகிறது.

கொவிட் 19 இன் ஒமெக்ரோன் திரிபின் மூல நாடாகத் தென்னாபிரிக்காவின் தலை உலகெங்கும் உருட்டப்பட்டு வருகிறது. அதனால் அத்திரிபு பற்றிச் செய்திகள் வெளியானதும், தென்னாபிரிக்கா மற்றும் சுற்றிவர உள்ள நாடுகளின் குடிமக்களுக்கு உலக நாடுகள் பலவும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தின. ஆனால், தென்னாபிரிக்காவுக்கே தொடர்பில்லாதவர்கள் அமெரிக்காவில் அத்திரிபு தொற்றிய முதல் நோயாளி என்று தெரியவந்ததால் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அமெரிக்காவில் ஒமெக்ரோன் தொற்றுள்ளவர்கள் என்றறியப்பட்டோர் எவருக்கும் தென்னாபிரிக்காவுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவருகிறது. நவம்பர் 26 ம் திகதி அமெரிக்கா தனது நாட்டுக்குத் தென்னாபிரிக்காவிலிருந்து எவரும் வருவதைத் தடைபோட்டது. ஆனால், ஏற்கனவே 23 ம் திகதி அங்கே ஒமெக்ரோன் தொற்றுள்ளவர் காணப்பட்டார்.

நியூ யோர்க் மான்ஹட்டனில் நவம்பர் 19 . 21 இல் நடந்த “மங்கா” சித்திரக்கதை விசிறிகள் 53,000 பேர் சந்தித்தார்கள். அவர்களில் பலர் வீடு திரும்பியதும் தாம் தொற்றுக்குள்ளாகியிருப்பதைத் தெரிந்துகொண்டார்கள். அவர்களிலொருவரான ஒரு மின்னசோட்டா நகரக் குடிமகன் பீட்டர் மக்-கின் என்பவரே அமெரிக்காவின் முதலாவது ஒமெக்ரோன் திரிபு நோயாளியாகும்.  

பீட்டர் மக்-கின் உட்பட்ட மற்றைய அமெரிக்க ஒமெக்ரோன் திரிபு நோயாளிகள் எவரும் தென்னாபிரிக்காவுக்குப் பயணித்ததோ, பயணித்தவர்களுடன் தொடர்புகொண்டதாகவே இதுவரை தெரியவில்லை. 

“மங்கா” சித்திரக்கதை விசிறிகள் சந்திப்பில் பங்குபற்றியவர்கள், அவர்கள் சந்தித்தவர்கள் பல்லாயிரக்கணக்கணக்கானோரை விசாரித்ததில் அவர்களில் எவருக்குமே ஒமெக்ரோன் திருபு தொற்றியுமில்லை. எனவே அமெரிக்காவுக்குள் அத்தொற்று எப்படி நுழைந்தது என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

உலகைப் பொறுத்தவரை ஒமெக்ரோன் தொற்று தென்னாபிரிக்காவுக்கு வெளியே முதல் தடவையாக ஹொங்கொங்கில் காணப்பட்டது. குறிப்பிட்ட நபர் தென்னாபிரிக்காவிலிருந்து ஹொங்கொங்குக்கு நவம்பர் 12 ம் திகதி பயணித்து அங்கேயிருக்கும் தனிமைப்படுத்தலுக்கு 21 நாட்கள் உட்படுத்தப்பட்டவர். அவர் அங்கே இறங்கியவுடன் பரிசீலித்ததில் அவருக்குக் கொவிட் 19 தொற்றே இருக்கவில்லை. ஆனாலும், அவர் தனது தனிமைப்படுத்தலில் இன்னொருவரையும் ஒமெக்ரோன் தொற்றுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

நிஜத்தில் ஒமெக்ரோன் தொற்று தென்னாபிரிக்காவிலிருந்து வந்திருக்க வேண்டியதில்லை. அது ஏதோ ஒரு விலங்கினால் காவப்பட்டுத் திரிபுக்குள்ளாக வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு நாடுகளுக்குள் பரவியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.

சாள்ஸ் ஜெ.போமன்