சிலிக்கோன் கையொன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முயன்ற பல் மருத்துவர் பிடிபட்டார்.
கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கை வீடு – வேலை- வீடு என்றாகும் என்ற கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கும் நாடு இத்தாலி. அதிலிருந்து தப்புவதற்குப் பலரும் பல தகிடுதத்தங்களும் செய்கிறார்கள். அந்த வழியில் ஒரு பல் மருத்துவர் சிலிக்கோனால் ஆன போலிக் கையொன்றில் ஊசி போடவைத்து ஏமாற்ற முற்பட்டிருக்கிறார்.
மருத்துவத் துறையிலிருப்பவர்கள் தடுப்பூசி எடுக்க மறுத்தால் அவர்கள் வேலை இழப்பார்கள். அதனால், 57 வயதான அந்தப் பல் மருத்துவரின் வேலை ஏற்கனவே பறிபோய்விட்டது. ஆயினும் தடுப்பூசிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நடமாடும் எண்ணத்துடன் அந்தப் பல் மருத்துவர் தடுப்பூசி மையம் சென்றிருக்கிறார்.
இத்தாலியின் வடக்கிலிருக்கும் பியேலா நகர தடுப்பூசி மையத் தாதி அந்த நபர் தடுப்பூசிக்காகக் கையை நீட்டியபோது அது குளிரானதாகவும், பிளாஸ்டிக் போலவும் இருப்பதை உணர்ந்தார். பரிசீலித்ததில் அவர் தனது உண்மையான கையைச் சட்டைக்குள் மறைத்திருந்தது தெரியவந்தது.
ஏமாற்ற முயன்ற அந்த நபர் மீது குற்றவியல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்