நீண்டகால மனமுறிவுகளுக்குப் பின் மீண்டும் சவூதிய அரசகுமாரன் கத்தாருக்கு விஜயம்.
சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் கத்தாருடனான தொடர்பை சவூதி அரேபியா முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவு நாடுகளையும் கத்தாருடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ளச் செய்தது. இவ்வருட ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அந்த நாடுகள் கத்தாருடன் மீண்டும் நட்பில் இணைந்துகொண்டன.
அதன் பின்னர் முதல் தடவையாக சவூதிய அரசகுமாரன் முஹம்மது பின் சல்மான் கத்தாருக்குப் புதனன்று விஜயம் செய்தார். அவரை கத்தாரின் அரசன் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி எதிர்கொண்டு வரவேற்ற பின்னர் இரண்டு பகுதியாரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
சவூதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் கத்தாரை ஒதுக்கி வைத்திருந்த சமயத்தில் கத்தாருக்கு துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் நெருக்கமாகியிருக்கின்றன. சவூதியப் பத்திரிகையாளர் கஷோஜ்ஜி துருக்கியிலிருக்கும் சவூதி அரேபியத் தூதுவராலயத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டதுடன் துருக்கி – சவூதி அரேபியாவுக்கு இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. அத்துடன் கத்தார் சர்வதேச அரங்கில் மேற்கு நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு நடுவராகவும் வெற்றிகரமாகத் தன்னை நிறுவிக்கொண்டது.
மத்திய கிழக்கு எண்ணெய் வள நாடுகள் சமீபத்தில் தங்களுடைய அரசியல் இணைப்புக்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன. ஈரான் – எமிரேட்ஸ் நாடுகள் தம்மிடையே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு முன்னர் ஈரானுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் சவூதி அரேபியாவும் நடத்தியிருக்கிறது. கத்தாருக்குச் சமீப நாட்களில் பிரென்சுத் தலைவர் மக்ரோன், துருக்கிய ஜனாதிபதி எர்டகான் ஆகியோர் விஜயம் செய்திருந்தார்கள்.
முஹம்மது பின் சல்மான் கத்தாருக்கு முன்னர் ஓமான் மற்றும் எமிரேட்ஸில் தனது விஜயத்தையும், பேச்சுவார்த்தைகளியும் ஆரம்பித்திருந்ததாகத் தெரிகிறது. பஹ்ரேன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் அவர் தனது பயணத்தைத் தொடரவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்