பாரதியின் ஞான முழக்கங்கள்

பெண்ணிங்கே அடிமையன்று அறிவி னாலே
—பேதையெனும் நிலையிங்கே மாற வேண்டும்
கண்ணென்று சொல்வதிலே பயனோ இல்லை
—கல்விக்கண் தந்தவரை உயர்த்த வேண்டும்
மண்மீது நிமிர்ந்துபெண்கள் நடக்க வேண்டும்
—மதிப்புயர்ந்து நாடுதனை ஆள வேண்டும்
விண்மீது பறந்துபெண்கள் உயர வேண்டும்
—வீறுடனே திகழவேண்டும் என்று ரைத்தோன் !

சாதியென்னும் பிரிவிங்கே இல்லை யென்றும்
—சாத்திரங்கள் பொய்யென்றும் முழக்க மிட்டோன்
பாதியிலே வந்தசாதி ஒழிக வென்றே
—பார்ப்பனரும் பறையருமே ஒன்று யென்று
வீதியிலே கனகலிங்கம் உடலில் பூணூல்
—வீற்றிருக்க அணிவித்துப் பொதுமை யென்றோன்
மோதியிங்கு வீழ்த்துகின்ற வேறு பாடு
—மொத்தமாக போகவேண்டும் என்று ரைத்தோன் !

மன்னராக இராமரொடு தர்ம ராண்டு
—மண்ணிற்குத் தர்மத்தைச் சொன்ன நாட்டில்
வன்மைகளை அழிக்கின்ற ஆன்மீ கத்தை
—வளர்த்திட்ட நல்மகான்கள் பிறந்த நாட்டில்
அன்னியர்க்கே இங்கென்ன வேலை யென்றான்
—ஆங்கிலேயன் ஆள்வதற்கா நாடு என்று
சொன்னசொல்லில் கனலேற்றி உணர்வை ஏற்றிச்
—சொந்தநாட்டை மீட்பதற்கே கவியு ரைத்தோன் !

ஆயிரமாய்த் தெய்வங்கள் உண்டு யென்போர்
—அறிவிலிகள் ; உழைப்போர்தாம் தெய்வ மென்று
பாயிரமாய் உழைப்புதனைப் போற்றிப் பாடிப்
—பாட்டாளித் தோழர்க்குப் பெருமை செய்தோன் !
வாயில்கள் கடந்தடுத்த நாட்டிற் குள்ளே
—வந்திட்ட புரட்சிக்கு வாழ்த்து ரைத்து
மாயிருளாம் அச்சத்தைத் தகர்த்தெ றிந்து
—மனத்தினிலே துணிவோடே எழுக வென்றோன் !

ஆன்மாவின் தத்துவத்தைக் குயிலின் பாட்டில்
—அழகாக எடுத்துரைத்துத் தெளியச் செய்தோன்
ஊன்உருக்கும் பக்தியினைக் கண்ணன் பாட்டில்
—உலகிற்கே எடுத்துரைத்துப் புரிய வைத்தோன் !
தேன்தமிழின் இனிமையினைச் சிந்து தன்னில்
—தெவிட்டாமல் சந்தத்தில் ஊட்டி விட்டோன்
கூன்நிமிரச் சுதந்திரத்து வேட்கை தன்னைக்
—குருதிக்குள் பாட்டாலே ஏற்றி விட்டோன் !

புலவர்தம் நாவிருந்த தமிழை மேட்டுப்
—புலத்தவரே அறிந்திருந்த தமிழைக் குச்சு
நிலத்தவரும் அறியுமாறு எளிமை செய்து
—நின்றிருந்த மரபுதனை மாற்றித் தந்தோன் !
நலத்தமிழின் நூல்களினை உலகம் கற்க
—நாம்பெயர்த்து அளிப்பதோடு அவர்தம் நூல்கள்
உலவிடநம் தமிழ்மொழியில் மாற்றம் செய்தே
—உயர்த்திடவே வேண்டுமென முழுக்கம் செய்தோன் !

எழுதுவது: பாவலர் கருமலைத்தமிழாழன்