தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களும் 24 மணிக்குள் தொற்று இல்லை என்று பரிசீலிக்கவேண்டும் என்கிறது இத்தாலி.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பவர்கள் ஒன்றியத்துக்குள் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குள் மாட்டாமல் சுதந்திரமாக நடமாடலாம் என்ற நிலைமையை மாற்றியிருக்கிறது இத்தாலி. தடுப்பூசி போடாத ஐரோப்பிய ஒன்றியத்தினர் 5 நாள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும், கொவிட் 19 சான்றிதழ் கொண்டிருப்பவர்கள் இத்தாலிக்குள் நுழைந்த 24 மணி நேரத்துக்குள் தனக்குத் தொற்றில்லை என்று பரிசீலிக்கவேண்டும் என்று அறிவித்திருக்கிறது இத்தாலி.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்களின் தடுப்பூசிச் சான்றிதழுக்குக் கௌரவம் அளிக்காத இத்தாலியின் நடவடிக்கையை ஒன்றியம் கண்டித்திருக்கிறது. டிசம்பர் 01 ம் திகதி முதல் போர்த்துக்காலுக்கு வரும் பிரயாணிகள் யாராகவிருப்பினும் தம்மைக் கொவிட் 19 பரிசோதனைக்கு உள்ளாக்கிக்கொள்ளவேண்டும் என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.
ஐ.ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்குப் பத்து நாட்கள் கட்டாயத் தடைப்படுத்தல் என்றும் இத்தாலிய அரசு அறிவித்திருக்கிறது.
டிசம்பர் 14 ம் திகதியன்று இத்தாலியில் 20,000 புதிய கொவிட் 19 தொற்றாளர்களும், 120 இறப்புக்களும் பதியப்பட்டிருக்கின்றன. நாட்டின் 77 % மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கும் அங்கே இந்த இலக்கங்கள் கொரோனாப் பரவல் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. ஒமெக்ரோன் தொற்றுக்கள் அங்கே ஒரு டசினுக்கும் குறைவாகவே காணப்படுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்