தடுப்பூசிகளிரண்டையும் எடுக்காதவர்களைக் கொண்டுவரும் விமானங்களுக்குத் தண்டம் – கானா

மேற்கு ஆபிரிக்காவில் கடுமையான கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நாடான கானா புதனன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கிறது. அக்ரா விமான நிலையத்தில் இறங்கும் பயணிகளில் தடுப்பூசி போடாதவர்கள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட விமான நிறுவனம் 3,500 டொலர் செலுத்தவேண்டும். அதே போலவே நாட்டுக்குள் நுழைவதற்காகப் பயணிகள் நிரப்பவேண்டிய படிவத்தை நிரப்பாதவர்கள் மீதும் தண்டம் விதிக்கப்படும்.

மீறுகிறவர்களில், கானாவைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், வெளிநாட்டவர்களாக இருப்பின் அனுமதி மறுக்கப்படும் என்று கானாவின் விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கொவிட் 19 தொற்றுப் பரவ ஆரம்பித்ததிலிருந்து அவற்றை மிகவும் பரந்த அளவில் பரிசீலனை செய்து கண்டுபிடிக்கும் ஆபிரிக்க நாடு கானா ஆகும். இதுவரை அங்கே அவ்வியாதியால் இறந்தவர்கள் 1,243 பேர், தொற்றுக்கு உள்ளானோர் 132,000 பேர். நாட்டின் 5 % குடிமக்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

கானாவில் சமீபத்தில் பரவும் தொற்றுக்கு 60 % காரணகர்த்தாக்கள் குறிப்பிட்ட விமான நிலையத்தின் மூலமாகவே நுழைந்திருக்கிறார்கள் என்று கானா சுட்டிக்காட்டியே மேற்கண்ட கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்