சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு!
கடலாதிக்கப் போட்டியில் கேந்திர மையமாக மாறும் பசுபிக் தீவுகள்.
“நீங்கள் நியூ கலிடோனியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்று சுதந்திரதேசமாக வாழ விரும்புகிறீர்களா?”
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப்பிராந்தியங்களில் ஒன்றான நியூகலிடோனியா தீவின் மக்கள் இந்தக் கேள்விக்கு “இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக இந்தக் கேள்வியை நிராகரித்துள்ள அவர்கள் பிரான்ஸின் கீழ் இணைந்துவாழும் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் சுயாட்சிகோரும் பழங்குடி மக்கள் சார்ந்த சுதந்திர இயக்கத்தினர் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரித்திருந்தனர். கொரோனா வைரஸ்தொற்று நோயால் பிரசார நடவடிக்கைகளைப் பரந்த அளவில் முன்னெடுக்க முடியாத நிலை இருப்பதைக் காரணங்காட்டித் தேர்தலை அடுத்த ஆண்டு செப்ரெம்பர் வரை ஒத்திவைக்குமாறுஅவர்கள் கோரியிருந்தனர்.
பழங்குடி இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் இன்றைய வாக்களிப்பு மிக மந்தமாக இருந்தது என்பதை சுயாதீனஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றைய வாக்களிப்பில் அரைவாசிக்கும் குறைவாக 43.90% வீத வாக்குகளேபதிவாகி உள்ளன. அவற்றில் பிரிவினைக்கு எதிராக 96.49% வீதமானோரும் ஆதரவாக 3.51% வீதமானோரும் வாக்களித்திருக்கின்றனர். ஏற்கனவே 2018 2020 களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளிலும் பிரிவினையை எதிர்க்கின்ற தரப்பினரே வெற்றிபெற்றிருந்தனர்.
சுயநிர்ணய வாக்களிப்பின் முடிவுகள்குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கின்றஅதிபர் மக்ரோன்,”பிரான்ஸ் இன்றிரவுமேலும் அழகுடன் மிளிர்கிறது.அது நியூகலிடோனியாவையும் தன்னகத்தேகொண்டிருப்பதால் “என்று கூறியிருக்கிறார்.அதிபர் தேர்தலை எதிர்கொள்கின்ற பின்னணியில் கலிடோனியா மக்களது தீர்ப்பு மக்ரோனுக்கு ஆறுதலான ஒரு செய்தியாக வந்திருக்கிறது.
சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட நியூ கலிடோனியாதீவுக்கூட்டம் (archipelago) பசுபிக் கடலில்ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே இரண்டாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்அமைந்திருக்கிறது.
அங்குள்ள “கனாக்”(Kanak) என்கின்ற பழங்குடி இனத்தவர்களது கிளர்ச்சியை அடுத்து 1988 இல் செய்து கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையே பிரான்ஸின் காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்து கலிடோனியாவுக்குச் சுயாட்சி வழங்குவதைத் தீர்மானிப்பதற்கான மூன்று கட்ட சுயநிர்ணய வாக்கெடுப்புகளை நடத்த வழி செய்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (12/12) நடந்தது மூன்றாவது இறுதி வாக்கெடுப்பு ஆகும்.
பழங்குடி மக்களின் பகிஷ்கரிக்குமத்தியில் நடைபெற்று முடிந்துள்ளஇன்றைய தேர்தலை சுதந்திரத்துக்கு ஆதரவான இயக்கம்”போர்ப்பிரகடனம்” என்று கூறி நிராகரித்திருக்கிறது.தேர்தலை ரத்துச் செய்யுமாறு ஐ. நா.சபையிடம் கோரவுள்ளதாக அது தெரிவித்திருக்கிறது.
பிரான்ஸின் 13 கடல் கடந்த தீவுகளில்வறுமை, தொழில் வாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் அமைதியின்மை நிலவுகின்றது. தாங்கள் கவனிப்பின்றிக் கைவிடப்பட்டதான உணர்வு அங்கு வசிப்போர் மத்தியில் மேலெழுந்துள்ளது.
நியூ கலிடோனியாவின் இன்றைய வாக்களிப்பு அங்கு 1980 களில் உருவான வன்முறைகள் போன்ற பதற்ற நிலைமையை உருவாக்கி விடலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். தீவின் பாரம்பரிய வழித் தோன்றல்களான “கனாக்” இனத்தவருக்கும் அங்கு வசிக்கின்ற பிரெஞ்சு வெள்ளை இனத்தவருக்கும் இடையிலான வேறுபாடுகளே அங்கு கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.
நியூ கலிடோனியாவில் சீனா கால்லூன்றுமா?
பிரான்ஸின் மிகப் பெரிய கடல்கடந்த பிராந்தியங்களில் ஒன்றாகிய அழகிய நியூ கலிடோனியாத் தீவுக்கூட்டங்கள் அவற்றின் நிக்கல் (nickel) உலோக வளம் காரணமாக உலக சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. உலகின் மொத்த நிக்கல் தாது வளத்தில் பத்து வீதமானவை தீவுக் கூட்டங்களில் செறிந்துள்ளன.மொபைல் தொலைபேசிகள், பற்றரிகள், துருப்பிடிக்காத இரும்பு போன்றவற்றைத் தயாரிப்பதற்கு நிக்கல் பிரதான பொருளாகப் பயன்படுகிறது.
அதேசமயம் பிரான்ஸின் பசுபிக் கடல்ஆதிக்க உரிமை கோரலுக்கான முக்கியபிடிகளில் ஒன்றாக இத் தீவுக் கூட்டங்கள்உள்ளன. பசுபிக் கடலில் பிரான்ஸின்உரிமைகள் மற்றும் இராணுவப் பிரசன்னத்துக்கான நியாயாதிக்கத்தை நியூ கலிடோனியாவே வழங்குகிறது. கலிடோனியா சுதந்திர தேசமாக மாறுவது சீனா அங்கு ஆழக் கால் பதிப்பதற்கு வழிவகுத்துவிடும் என்று மேற்குலக நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
“அங்கு பிரான்ஸின் பிடி தளருமானால் சீனா தன்னை அங்கு வலுவாக நிலைநிறுத்தக் கூடிய சகல ஏது நிலைகளும்காணப்படுகின்றன” – என்று பிரான்ஸின்சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார். அந்தப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளான பிஜி (Fiji) வனாட்டு(Vanuatu) சொலமன் தீவு (Solomon Islands) பப்புவா நியூ ஹினியா (Papua New Guinea) போன்றன ஏற்கனவேசீனாவின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,”சீனா தனது முத்து மாலையை ஆஸ்திரேலியாவின் வாசல் அருகே நியூ கலிடோனியாவில் கொண்டுவந்து முடிச்சுப்போடஆயத்தமாகிறது” என்று கூறியிருக்கிறார்.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்.