ஹெலிகொப்டரிலிருந்து 3,000 இறா. நஞ்சைத் தூவுவதற்கு கலிபோர்னியா திட்டம்.
பரல்லோன் தீவுகள் தேசிய வனத்தின் [Farallon Islands National Wildlife Refuge] மீது ஹெலிகொப்டர்கள் மூலம் ஆயிரக்கணக்கான இறாத்தல் நச்சுப்பொடியைத் தூவுவதற்கு கலிபோர்ணியாவின் கடற்கரைப் பாதுகாப்பு சேவையினர் முடிவுசெய்திருக்கிறார்கள். காரணம், அங்கே அதிகரித்துவரும் குறிப்பிட்ட ஒரு எலி இனத்தை அழிப்பதற்காகும்.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் பிரத்தியேகமாக வாழ்ந்துவரும் பல விலங்கு, பறவையினங்களை அழிக்கக்கூடிய அளவில் அப்பகுதியில் இதுவரை இல்லாத எலியினமொன்று ஆக்கிரமித்து வருகிறது. எனவே, அவ்வெலிகளை அழித்துப் பாரம்பரியமாக அங்கே வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கவே அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த நடவடிக்கைக்கு எதிராகப் பலமான எதிர்ப்பும் வெவ்வேறு சூழல் பேணும் அமைக்கப்புக்களிடமிருந்து எழுந்திருக்கிறது. நஞ்சை அங்கே பரப்பும்போது அது அந்தப் பகுதியில் மட்டும் குறிப்பிட்ட இன விலங்குகளைக் கொன்றொழிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தீவுப்பகுதியில் பரவும் அந்த நஞ்சு நீர்ப்பரப்பு மூலம் வேறு பாகங்களுக்கும் பரவி மற்றும் பல விலங்குகளையும், மீன்வகைகளையும் அழிக்கக்கூடும் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்