சிறீலங்காவின் வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு பொருளாதாரத்தை மேலும் இறுக்குகிறது.

26 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமைப்பட்டிருக்கும் தீவின் வர்த்தக நிலைமை பலவீனமடைந்துவிட்டிருப்பதாக அதன் தரத்தை மேலும் ஒரு படி கீழிறக்கியிருக்கிறது Fitch அமைப்பு. மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் 1.5 % ஆல் பாதிக்கப்பட்டிருப்பதை சிறீலங்கா வெளிப்படுத்தியதை அடுத்தே இந்தத் தரமதிப்புத் தாழ்த்தல் செய்யப்பட்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தில் சிறீலங்காவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மேலும் 1.58 பில்லியன் டொலர் விழுக்காடு அடைந்திருக்கிறது. அதனால், வாங்கியிருக்கும் கடன்களுக்கு, வரவிருக்கும் இரண்டு வருடங்களிலும் [1.5 பில்லியன் டொலர்] செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்த முடியாமல் போகும் என்று கணிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிலைமையைச் சமாளிக்கும் ஒரு நடவடிக்கையாக வெளிநாட்டுக் காரியாலயங்கள் மூன்றை மூடுவதாக சிறீலங்கா நேற்று வெள்ளியன்று அறிவித்திருந்தது. சைப்பிரஸ், பிராங்க்பேர்ட் காரியாலயங்களும், நைஜீரியா தூதுவராலயமும் மூடப்படும். பிராங்க்பேர்ட் செயற்பாடுகள் பேர்லினுக்கு மாற்றப்படும். மற்றவை இரண்டும் தொடர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தச் சக அமைச்சர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வர்த்தக அமைச்சர் பசில் ராஜபக்சே நன்றி தெரிவிக்கிறார்.

சிறீலங்கா அடுத்த வருடம் தனது கடன்களுக்காக வெளிநாடுகளுக்குக் கொடுக்கவேண்டிய கடனின் பகுதிகளும், வட்டியும் சேர்ந்து 6.9 பில்லியன் டொலராகும். தற்போதைய அரசு பதவியேற்கும்போது சுமார் 7.5 பில்லியன் டொலராக இருந்த அன்னியச் செலாவணி 1.58 ஆகக் குறைந்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுக்களால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 12. 3 % ஆல் வளர ஆரம்பித்திருந்தது. ஆனால், அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட முடக்கங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதித்திருக்கின்றன.

நாட்டிலிருப்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடம் அன்னியச் செலாவணியை நாட்டின் மத்திய வங்கி மிகவும் வரவேற்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்