ஈரோ லொத்தரில் மற்றொரு வெற்றி! 162 மில்லியன் ஈரோ வென்ற நபர் இறுதி நிமிடத்தில் உரிமை கோரல்!
ஈரோ மில்லியன் நல்வாய்ப்புச் சீட்டில்162 மில்லியன் ஈரோ ஜக்பொட் தொகைவென்ற நபர் ஒருவர் அதனை இறுதிநிமிடங்களில் உரிமை கோரிப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் வெல்லப்பட்ட 162 மில்லியன் ஈரோ பரிசுத் தொகைக்கான வெற்றியாளர் யார் என்பது கடந்தசில வாரங்களாக உரிமை கோரப்படாமல் இருந்து வந்தது. உரிமை கோரிப் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான அவகாசம் முடிவடைய இருந்த இறுதி நாளில் பிரான்ஸ் வாசி ஒருவர் தனது வெற்றி இலக்கங்களை உறுதி செய்துள்ளார். வெற்றிக்கு உரிமை கோருவதற்கான கால அவகாசம் முடிவடைவதற்குப்17 நிமிடங்கள் மட்டுமே இருக்கையில் அவர் தனது வெற்றி இலக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளார் என்ற தகவலை பிரான்ஸின் தேசிய லொத்தோ நிறுவனமாகிய FDJ அறிவித்திருக்கிறது.
பிரான்ஸில் அண்மைக்காலத்தில் ஈரோமில்லியன் அதிர்ஷ்டத்தில் பெரும் தொகை வெல்லப்படுவது இது ஐந்தாவது தடவை ஆகும். 1 – 20 – 41 – 42 – 50ஆகிய வெற்றி எண்களும் 3-7 ஆகியநட்சத்திர இலக்கங்களுமே பேரதிர்ஷ்டமாக 162,289,050 ஈரோக்களை அள்ளிக்கொடுத்துள்ளன.இத் தொகையை வென்றவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவராவார்.
பரிசை வென்றவர் பிரான்ஸ்வாசியாக இருந்த போதிலும் வாழ்வில் முதற் தடவையாக விமானம் ஏறப்போகின்ற தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார்.கடந்த 20 ஆண்டுகளில் முதற் தடவையாகப் பாரிஸ் செல்ல விரும்புவதாகவும்அவர் கூறியுள்ளார் என்ற தகவலை தேசிய லொத்தர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரோ மில்லியன் அதிர்ஷ்டச் சீட்டிழுப்பில்கடைசியாகப் பிரான்ஸின் தஹிட்டி(Tahiti)தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் 220 மில்லியன் ஜக்பொட் தொகையை வென்றிருந்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.