5 ஜி தொலைத்தொடர்பு இணைப்பால் கொவிட் 19 வருவதாக நம்புகிறவர்களுக்குக் கதிரியக்கமுள்ள ஆபரணங்கள் விற்று ஏமாற்றுகிறார்கள்.

உலகின் பல பாகங்களிலும் கொவிட் 19 பரவுவதற்கான காரணங்களாகப் பலவித கற்பனைகள் உலவுகின்றன. அவற்றிலொன்று தொலைத்தொடர்புக்கான 5 ஜி மையங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்பதாகும். அதை நம்புகிறவர்களை ஏய்த்து விற்கப்படும் சுமார் 10 ஆபரணங்கள் கதிரியக்கம் கொண்டவை என்று டச்சு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

“குறிப்பிட்ட 10 ஆபரணங்களும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் ஆபத்தானவை. நீண்ட காலம் அவைகளை அணிவது உடலுக்கும், மரபணுக்கும் தாக்குதல்களை விளைவிக்கும்,” என்று நெதர்லாந்தில் மக்களைக் கதிரியக்கத்திலிருந்து காக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

உலகளவில் குறிப்பிட்ட சிலர் மக்களின் எண்ணங்களை, அரசுகளைக் கைப்பற்றி இரகசியமாக இயக்குகிறார்கள் போன்ற நம்பிக்கைகளையுடைய கானொன் இயக்கம் போன்றவை கொவிட் 19 ம் அதுபோன்று இரகசியமாகப் பரப்பப்படுகிறது என்று நம்புகிறார்கள். அந்தத் திட்டங்களில் 5 ஜி தொலைத்தொடர்புகளும் பயன்படுத்தப்படுகின்றன என்பது அவர்களுடைய நம்பிக்கை. அப்படியான நம்பிக்கையுள்ளவர்கள் 5 ஜி தொலைபேசி மையங்களைத் தாக்கி அழித்தும் வருகிறார்கள்.

அதுபோன்ற நம்பிக்கையுள்ளவர்களுக்கு விதம் விதமான சங்கிலி, காப்பு போன்ற ஆபரணங்களை விற்றுவருகிறார்கள் சில நிறுவனங்கள். அப்படியான ஆபரணங்கள் சிலவற்றை ஆராய்ந்தபோதே அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துவது தெரியவந்து இருக்கிறது.

5 ஜி தொலைபேசி மையங்கள் பற்றிப் பல விஞ்ஞானபூர்வமான ஆராய்வுகள் நடந்திருக்கின்றன, தொடர்ந்து நடந்தும் வருகின்றன. அவைகள் மக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதகமானவை அல்ல என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புப் பரிந்துரை செய்திருக்கிறது.

குறிப்பிட்ட ஆபத்தான ஆபரணங்களை விற்கும் நிறுவனம்  என்று “Energy Armor” குறிப்பிடப்படுகிறது.அவ்விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டச்சு அரசு ஆணையிட்டிருக்கிறது.

எச்சரிப்புக்கு உள்ளான பொருட்களை இந்த இணைப்பில் காணலாம் ; https://www.autoriteitnvs.nl/actueel/nieuws/2021/12/16/heeft-u-een-quantum-pendant-anti-5g-hanger-of-negatief-ionen-sieraad-of-slaapmasker-leg-deze-veilig-weg

சாள்ஸ் ஜெ. போமன்