இடதுசாரிப் பாதையில் சிலேயை நடத்த கபிரியேல் போரிச்சுக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.
மாணவர் போராட்டத் தலைவராக இருந்த கபிரியேல் போரிச்சின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள். எதிர்த்தரப்பில் நின்று போரிச்சை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சித்தரித்த வலதுசாரிப் பிற்போக்குவாதியால் 45 % க்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது.
யார் வெல்வார் என்று கடைசிவரை தெரியாத நிலையில் நடந்த தேர்தலில் தனது தோல்வியை ஒத்துக்கொண்ட ஹோசே அந்தோனியோ காஸ்ட் வெற்றிபெற்றிருந்தால் நாட்டை மிகவும் பழமைவாதப் பாதையில் கொண்டுசெல்வதாக வாக்குறுதியளித்திருந்தார். எனவே, பெண்களின் உரிமை, பின் தங்கிய மக்களின் வாழ்வு ஆகியவை பற்றிய பயம் பரவியிருந்தது. சிலேயில் தேர்தலுக்குக் கடைசி இரண்டு வாரங்களில் கணிப்புத் தேர்தல்கள் நடத்தச் சட்டம் அனுமதிக்காது.
வெற்றிபெற்ற போரிச் லத்தீன் அமெரிக்காவின் இளைய ஜனாதிபதி என்ற பெயரையும் பெறுகிறார். 35 வயதான அவரை, “இன்று முதல் அவரே சிலேயின் தலைவர். அவருக்கு நாம் முழுமையான ஆதரவை நல்கவேண்டும். எங்கள் நாட்டுக்கே எப்போதும் முதலிடம்,” என்று டுவீட்டில் பாராட்டிய அந்தோனியோ காஸ்ட் உடனடியாக போரிச்சின் அலுவலகத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.
வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் சிலேயின் மக்கள் வாக்களித்திருந்தார்கள். இளைய வாக்காளர்களை அதிக அளவில் தேர்தல் சாவடிகளுக்கு வரச் செய்ததும் போரிச்சின் வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்