ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பூனவாலா குடும்பத்தினரின் ஆராய்ச்சி நிலையம்.
அஸ்ரா செனகாவின் கொவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சி உட்பட்ட ஆராய்ச்சியை உள்ளடக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவ பூனவாலாவின் குடும்பத்தினர் 66 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். ஆராய்ச்சி மையக் கட்டடங்களுக்குப் பூனவாலாவின் குடும்பப் பெயர்கள் சூட்டப்படும்.
அஸ்ரா செனகா, செரும் இன்ஸ்டிடியூட் விஞ்ஞான நிறுவனம் ஆகியவை அந்த ஆராய்ச்சி மையத்தில் ஒன்றிணைந்து செயற்படும். குறிப்பிட்ட கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பங்குபற்றிய ஜென்னர் இன்ஸ்ட்டிடியூட் தற்போது பரிசீலித்துவரும் மலேரியாத் தடுப்பு மருந்துத் தயாரிப்பிலும் பூனவாலாவின் ஆராய்ச்சி மையம் ஈடுபட இருக்கிறது.
செரும் இன்ஸ்டிடியூட் ஆடார் பூனவாலாவின் தந்தை சைரஸ் பூனவாலாவால் 1966 ஆரம்பிக்கப்பட்டது. அவர் இந்தியாவின் ஐந்தாவது பணக்காரர் என்ற இடத்தைப் பெற்றிருக்கிறார். உலகில் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பாளராக அது வளர்ந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்