ஆசிரியர்களின் சுதந்திரப் பேச்சுரிமையைக் காப்பதாக உறுதி கொடுக்கிறது டென்மார்க்.

பாடசாலை ஆசிரியர்கள் எவ்விதப் பயமுமின்றி மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள், பெண்ணுரிமை, ஓரினச் சேர்க்கை, யூத இன அழிப்பு போன்ற விடயங்களை வகுப்புக்களில் பேசக்கூடிய நிலைமை இருக்கவேண்டுமென்று தெளிவாகக் கருதுகிறது டென்மார்க். மிரட்டல்களுக்கு அஞ்சி ஆசிரியர்கள் கருத்துப் பகிர்வதில் தம்மை அடக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று டென்மார்க் அரசு குறிப்பிட்டிருக்கிறது.

நாட்டில் அரசமைத்திருக்கும் இடதுசாரி அரசு மேற்கண்ட எண்ணத்துடன் “கருத்துரிமை” பற்றிய வாதங்களை ஜனவரியில் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவிருக்கின்றன. “சகல ஆசிரியர்களும் எவ்விதப் பயமுமின்றி மாணவர்களுடன் சகல் கருத்துகளையும் வாதிக்கவேண்டும். அதற்கான சூழலை உண்டாக்கிக் கொடுப்பது பாராளுமன்றத்தின் கடமை,” என்கிறார் நீதியமைச்சர் நிக் ஹாக்கருப்.

2005 ம் ஆண்டில் இஸ்லாத்தின் தீர்க்கதரிசி முஹம்மது பற்றிய கேலிச்சித்திரங்களை டென்மார்க்கின் பத்திரிகையொன்று பிரசுரித்ததிலிருந்து அந்த நாட்டுக்கெதிராக இஸ்லாமிய நாடுகளில் பலர் பொங்கியெழுந்தனர். டென்மார்க்கின் பொருட்களை வாங்கலாகாது என்றும் கோஷங்கள் எழுந்தன. 

பிரான்சில் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டி அதுபற்றியும், கருத்துரிமைகள் பற்றியும் படிப்பித்த ஒரு ஆசிரியர் கோரமாகக் கொல்லப்பட்டார். கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்த சஞ்சிகைப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டனர். 

இதுபோன்ற சம்பவங்கள் டனிஷ் ஆசிரியர்களை மிரளவைக்கக்கூடாது, முஹம்மது கேலிச்சித்திரங்கள் தாராளமாகக் கருத்துரிமை பற்றிய வகுப்புக்களில் பாவிக்கப்படலாம் என்று கடந்த வாரம் டனிஷ் எதிர்க்கட்சிகளும் அரசுக்குத் தமது முழு ஆதரவையும் கொடுத்திருக்கின்றன.

“ஆரம்ப்பாடசாலைகளில் ஜனநாயகம், கருத்துரிமை மட்டுமன்றி முஹம்மது சித்திரங்களால் ஏற்பட்ட சர்ச்சைகளையும் டென்மார்க்கின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகக் கற்பிக்கவேண்டும்,” என்றும் டென்மார்க்கின் நீதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்