ஸ்பெய்ன் பாதிரியார்களிடையே பாலர்களைச் இச்சைக்குப் பயன்படுத்தல் மலிந்திருப்பதாக அறிந்து வத்திக்கான் ஆராய்வு.

1943 – 2018 காலகட்டத்தினுள் 251 ஸ்பெயின் பாதிரியார்கள் சிறுவயதினரைத் தமது பாலியல் இச்சைக்குப் பாவித்ததாக ஒரு ஸ்பானியப் பத்திரிகை ஆராய்வில் தெரியவந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,200 பேர். 

ஆனால், உண்மையான எண்ணிக்கை அதைப் போலப் பல மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பத்திரிகை. பத்திரிகையின் ஆராய்வில் வெளிவந்தவை இம்மாத ஆரம்பத்தில் பாப்பாண்டவரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அதையடுத்து, வத்திக்கான் அதுபற்றிய ஆழமான ஆராய்வொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறது. 

ஸ்பெய்ன் மேற்றிராணிகளின் ஒன்றமைப்பு அப்படியான குற்றங்களுக்குப் பாதிரியார்களால் உட்படுத்தப்பட்டவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளவேண்டுமென்று கேட்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு கோரிக்கை பிரான்சில் வைக்கப்பட்டுத் தெரியவந்த விபரங்களின்படி 1950 களில் மட்டும் கத்தோலிக்கப் பாதிரியார்களின் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் லட்சக்கணக்கானோர் என்று தெரியவந்திருக்கிறது.

கத்தோலிக்க திருச்சபை இதேபோன்ற குற்றச்சாட்டுக்களைப் பல நாடுகளிலும் எதிர்நோக்கி அவை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சபையின் உயர்மட்டத்தினர் அப்படியான செயல்களில் ஈடுபடும் பாதிரியார்களை வெளிப்படுத்தாமல் விபரங்களை மறைத்ததும் தெரியவந்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்