எட்டயபுரத்தில் நடந்த மகாகவி பாரதியின் 140 ஆவது நினைவு நிகழ்வு

மகாகவி பாரதியின் கவிதைகளும், கருத்துக்களும் எப்படியோ அப்படியே அவரது ஒவ்வொரு செயல்பாடும் வாழ்க்கையும் இருந்துள்ளது
எட்டயபுரத்தில் நடைபெற்ற சென்னை மாநகர தமிழ்ச் சங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் புகழாரம்

சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியரின் 140வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கவியரங்கம், பாரதி அன்பர்களுக்கு பாராட்டு ஆகிய இருபெரும் நிகழ்வுகள் பாரதி மணிமண்டப வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு முன்பாக பாரதியாரின் நினைவில்லத்திலும் , பாரதியார் மணி மண்டபத்திலும் உள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலைகளுக்கு, சென்னை மாநகர தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாவரசு.பாரதிசுகுமாரன் தலைமையில், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாரதி அன்பர்கள், மாணவ மாணவிகள் என பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மணி மண்டப கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாராளும் பாரதி என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் பாரதியின் 140 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 140 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர். ஜீவா.காசிநாதன் வரவேற்புறையாற்ற
சென்னை மாநகரத் தமிழ்ச் சங்க செயலர் இரா. தங்கராஜ் தலைமையில் நிகழ்வு தொடங்கியது. கவியரங்கில் 140 கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழ்ச்செம்மல்.ஜெ.வ.கருப்புசாமி தலைமையில், பாரதியாரின் கொள்ளு பெயர்த்தி உமாபாரதி முன்னிலையில் பாராட்டரங்கம் தொடங்கியது, சங்கத்தின் தலைவர். பாவரசு.பாரதிசுகுமாரன் அறிமுக உரை நிகழ்த்த,
விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விழா பேரூரையாற்றி கவியரங்கத்தில் கவிதை வாசித்த கவிஞர் பெருமக்கள் மற்றும் பாரதி அன்பர்களுக்கு விருதும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.


விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.எஸ். ஜெயக்குமார் பேசுகையில் “விடுதலைக்காக போராடிய தியாகிகள், சான்றோர்களை எடுத்துக்கூறும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். ஒரு பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிதாக பாரதியின் கவிதைகள், கருத்துக்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பது தீர்க்கதரிசனம் ஆகும். மகாகவி பாரதியார் ஒரு கவிஞர் மட்டுமல்ல முற்போக்கு சிந்தனையாளர். சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார். மகாகவி பாரதியார் ஆகிய மூன்று பேரும் நாட்டுப்பற்று உணர்வை தூண்டக்கூடிய பேச்சுக்களாலும், கருத்துக்களாலும் செயல்களாலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை பயமுறுத்தியுள்ளனர். இந்த மூன்று பேருமே ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாகவும் உதவிகரமாகவும் இருந்து விடுதலை வேட்கையை விதைத்துள்ளார்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி பல கவிஞர்களின் கவிதைகள் நன்றாக இருக்கும். ஆனால் அவர்களது செயல்களை எதிர்மறையாக தான் பார்க்க முடியும். ஆனால் பாரதியைப் பொறுத்தவரை அவரது கவிதை எப்படியோ அப்படியே தான் அவரது ஒவ்வொரு செயல்பாடும் இருந்துள்ளது. சாதி மறுப்பு என்பது பாரதியின் கவிதை வரிகளில் மட்டுமல்லாது எல்லா சாதி, மத கூட்டங்களிலும் பங்கேற்று தனது கருத்தை நேருக்கு நேராக பதிவு செய்த தைரியசாலி பாரதியார். சாதி வேற்றுமைகள் இல்லாத சமுதாயத்தை சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் இன்றைக்கும் அனைவரது முயற்சியாக உள்ளது. இதனை 100 வருடங்களுக்கு முன்பே பாரதி முற்போக்கு சிந்தனையுடன் சொல்லியிருக்கிறார். அடுத்ததாக பாரதியின் கற்பனைத்திறன் என்பது தீர்க்கத்தரிசனமானது. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை, கையடக்க மொபைல் போனில் நாம் பெறக்கூடிய காணொளி காட்சிகளை, நேரடி தொலைதொடர்பை அன்றே தன் மெய்ஞானத்தால் பாடிய கற்பனை திறன் மிக்க தீர்க்கதரிசி மகாகவி பாரதியார். பாரதியின் தேசியப்பற்று, தமிழ் மொழிப்பற்று ஈடு இணையற்றது. பல மொழிகளில் ஆளுமை கொண்டிருந்த போதிலும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் பெருமைக்கு பெருமை சேர்த்தவர் முண்டாசு கவிஞர் பாரதி. பாரதியார் ஒரு தைரியசாலி என்பதற்கு எடுத்துக்காட்டாக புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் அங்கு ரவுடியிசத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ரவுடி தம்பாலா என்பவரை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நான் ஒரு சுதேசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அந்த ரவுடி தன்னை யார் என்று தெரியுமா என பாரதியிடம் கேட்டபோது நீ ஒரு பரதேசி என முகத்துக்கு நேராகச் சொல்லி மிரளவைத்த சக்தி படைத்தவர் பாரதி. அந்த ஒரு வார்த்தை அந்த ரவுடியின் மனதை வெட்கப்படச்செய்து அத்தோடு அந்த தம்பாலா என்பவர் ரவுடியிசத்தை விட்டுவிட்டு சாதாரண மனிதராக வாழ்க்கை வாழ்ந்தார் என்பது வரலாறு.
வறுமையும் சிக்கலும் நிறைந்த வாழ்க்கையில் சாகும் தருவாயில் கூட வ.உ.சி.யும் பாரதியும் நாட்டு விடுதலைக்காக எவ்வளது பாடுபட்டுள்ளார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மறைந்த போது இறுதி நிகழ்வில் பங்கேற்றவர்கள் 20க்கும் குறைவானவர்கள் தான். இருப்பினும் இறுதிநாள் வரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை யாரிடமும் விலை போகாத மிடுக்கு குறையாத சரியான வாழ்க்கையாகும். எதிர்காலமாவது சாதி, மத வேற்றுமை இல்லாத, ஆண் பெண் சமத்துவம் நிறைந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். தியாகங்களை, படைப்புகளை எல்லாம் பாடமாக நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். பாரதி பெயரில் ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இருந்த போதிலும் பாரதி பிறந்த எட்டயபுரத்து மண்ணில் பாரதி குறித்து இன்றைய இளம் தலைமுறையினர், மாணவ மாணவிகள் கவிதைகள் பாடுவது மிகச்சரியான புகழஞ்சலி ஆகும்.” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கவிஞர்கள் பாப்பாக்குடி அ. முருகன், இதயம் கிருஷ்ணா, தேவிகா குலசேகரன், க. சரவணன், சொக்கர் மணாளன், அ.க. இராசு, செல்வமுத்து மன்னார் ராஜ், தஞ்சை சந்துரு, தமிழ் ஆர்வலர்கள் திருமிகு சந்திரசேகர் மற்றும் க. சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் சென்னை மாநகரத் தமிழ்ச்சங்க துணைச்செயலர் செ.ப. தமிழரசன் நன்றி கூற நிகழ்வு மிக இனிதே நிறைவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.