தனது கடுமையான கடன்பளு விகிதம், வரவுசெலவுத்திட்ட கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கைவிடவேண்டும் என்கிறார் மக்ரோன்.

ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் புதிய நோக்கையும், வழிமுறைகளையும் கையாளவேண்டும் என்கிறது தற்போதைய ஒன்றியத் தலைமையை ஏற்றிருக்கும் பிரான்ஸ். பல முக்கிய தேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது பிராந்தியத்திலேயே தயாரித்து சுயநிறைவுடன் இருக்கவேண்டும் என்பது மக்ரோனின் எண்ணமாகும்.

மின்கலங்கள், வாகனங்களுக்கான முக்கிய உதிரிப்பாகங்களுக்கான தொழிற்சாலைகளை ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நிறுவவேண்டும். டிஜிடல் துறையிலும் தனது மக்களின் விபரங்களை ஐரோப்பாவுக்குள்ளேயே தேக்கும் செயற்பாடுகளை உண்டாக்கவேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் முதலீடுகளையும் ஒன்றிய நாடுகளிடையே ஊக்குவிக்கவேண்டும்.

பிரான்ஸ் முன்வைத்திருக்கும் அந்தப் புதிய வழியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிந்திக்க வேண்டுமானால் ஒன்றிய நாடுகள் எவ்வளவு கடனுக்குள்ளாகலாம், வரவு செலவுத்திட்டங்களில் எவ்வளவு செலவுகளை முதலீடாக்கலாம் போன்ற விடயங்களில் புதிய கட்டுப்பாடுகளை, அதாவது கட்டுப்பாட்டுத் தளர்த்தல்களைக் கொண்டுவரவேண்டும் என்கிறது பிரான்ஸ்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதாரத்தை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் அவைகள் புதிய முதலீடுகளைச் செய்வதற்கும், சமூக மாற்றங்களுக்குச் செலவழிக்கவும் தடையாக இருப்பதாக பிரான்ஸ் உட்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பிடுகின்றன. வட ஐரோப்பிய நாடுகளோ ஒன்றியத்தினுள், தொடர்ந்தும் கட்டுப்பாடான வரவுசெலவுத்திட்டங்களே இருக்கவேண்டும் அளவுக்கதிகமாகக் கடன்படலாகாது என்கின்றன. 

இரண்டு சாராருக்கும் இடையே இதுபற்றிய மாற்றங்களைக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளைப் பிரான்ஸ் தனது தலைமையில் ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் வெறுமனே சர்வதேசத் திறந்த பொருளாதாரக் கொள்கையில் தங்கியிராமல் முக்கிய தேவைகளுக்குத் தாமே முதலீடுகளைச் செய்து தயாரிப்பை ஊக்குவிக்கவேண்டுமென்ற பாதையில் ஐரோப்பிய ஒன்றியம் மாறும் என்றே நம்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்