கிறிஸ்தவ நிகழ்ச்சியொன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கியபோது 29 பேர் மிதிபட்டு மரணம்.
லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவின் ஒரு பகுதியில் இரவிரவாகக் கிறீஸ்தவர்களின் நிகழ்ச்சியொன்று நடந்துகொண்டிருந்தது. அதற்குள் கும்பலொன்று கத்திகள், ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களிடம் கொள்ளையடிக்க முயன்றது. அச்சமயத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் திகிலில் முண்டியடித்துக்கொண்டு ஓடித் தப்ப முயன்றனர்.
தப்பியோடியவர்களிடையே ஏற்பட்ட நெருக்கத்தில் மிதிபட்டுப் பதினோரு குழந்தைகள் உட்பட 29 பேர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதி ஜோர்ஜ் வியா மூன்று துக்ககர் நாட்கள் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸோகோஸ் என்றழைக்கப்படும் வழிப்பறிக் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் லைபீரியாவின் அதிகமாகி வருகிறது. சிறுவயதிலேயே வீதிகளில் வாழத்தொடங்கிய அவர்கள் பகலில் சிறு வியாபாரங்களைச் செய்து, பிச்சையெடுத்து வாழ்வதுண்டு. அவர்களில் ஒரு பகுதியினர் கத்திகள், சிறு ஆயுதங்களுடன் அகப்படுகிறவர்களைத் தாக்கி வழிப்பறிகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்