பெருந்தொற்றுக்காலம் உலகளாவிய அளவில் குப்பைகளை அதிகரித்திருக்கிறது.
முகக்கவசங்கள், கையுறைகள், பரிசோதிப்பு உபகரணங்கள் போன்றவைகளின் பாவனை பெருமளவில் கொரோன்ப்பரவல் காலத்தில் பாவிக்கப்படுகிறது. அதன் விளைவாக சர்வதேசக் குப்பைகளின் அளவு தீவிரமாக வளர்ந்திருப்பதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு சுட்டிக் காட்டியிருக்கிறது. அதன் அளவைத் தெளிவாக அறிவது கடினம். பாவிக்கப்பட்ட ஒன்பது பில்லியன் தடுப்பூசிகளால் மட்டும் 144 மில்லியன் தொன் குப்பைகளை உண்டாக்கியிருப்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஐ.நா-வின் அபிவிருத்தி அமைப்பான யு.என்.டி.பி நான்கு ஆசிய நகரங்களில் செய்த கணிப்பீடுகளின்படி ஆபத்தான மருத்துவ சேவைக் குப்பைகள் பத்து மடங்கால் அதிகரித்திருக்கிறது. அதைத் தவிர, தனியாரின் பாவிப்புக் குப்பைகளும் நோய்த்தொற்றுக் காலத்தில் பெருமளவில் அதிகரித்தது. பெருந்தொற்றுப் பரவிய முதலாவது வருடத்தில் மட்டுமே உலகெங்கும் 3.4 மில்லியன் முகக்கவசங்கள் தினசரிப் பாவிப்பின் பின்னர் குப்பையாகின என்று ஆராய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
தமது குப்பைகளைச் சரியான முறையில் கையாள்வதற்கு ஏற்கனவே, உலகின் பல வளரும் நாடுகள் திணறிக்கொண்டிருந்தன என்பது பல தடவைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. ஆபத்தான குப்பைகளைச் சரியான முறையில் கையாளாமலிருப்பது சுற்றுப்புற சூழலுக்கும், குப்பைகளைக் கையாளும் தொழிலாளர்களுக்கும் ஆபத்தானது. வளரும் நாடுகள் பலவற்றில் குப்பைகளைக் கையாளும் தொழிலாளர்களுக்கு தொழில் சூழல் பாதுகாப்பு மோசமானதாகவே இருந்து வருகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பெரும்தொற்றுக் காலத்தில் பாவிக்கப்பட பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 25 மில்லியன் தொன் உலகின் கடலில் எறியப்பட்டுவிட்டது சுட்டிக்காட்டப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்