“ஒரு கொரோனாத்தொற்றைக் கூட அனுமதிக்கத் தயாராக இல்லை, கட்டுப்பாடுகள் தொடரும்” என்கிறது சீனா.

தமது நாட்டின் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிட்ட நாடுகள் ஒவ்வொன்றாக அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கித் தடுப்பூசிகள் எடுத்திருந்தால் உள்ளே வரலாம் என்கின்றன. சீனாவோ, ஒற்றைக் கொவிட் 19 நோயாளியும் இருக்க விடமாட்டோம் என்று தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளையும், பொது முடக்கங்களையும் அனுசரிக்க வேண்டும் என்கிறது. சீனாவின் 90 % குடிமக்களுக்கு ஜனவரி மாத நடுப்பகுதியில் இரண்டு தடுப்பூசிகள் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.

சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கும் அந்த நாட்டின் தொற்றுநோய்ப் பரவல் தடுப்புத் திணைக்களத்தின் தலைவர் வு சன்யு அந்த முடிவைப் பற்றி விளக்கியிருக்கிறார்.

“கொரோனாத் தொற்றுக்களைத் தடுப்பு மருந்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது, கட்டாயமான பரீட்சைகள், அறுதியான பொது முடக்கங்கள், பாதுகாப்பான தனிமைப்படுத்தல்கள் தொடரும்,” என்கிறார் வு சன்யு. 

தனது முடிவுக்குச் சாதகமாக அவர் பீஜிங்கின் பக்கத்து நகரமான சியான்யின்னில் தடுப்பூசி போட்டவர்களிடையே கொரோனாத் தொற்று பரவலாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அதே சமயம் ஹொங்கொங்கில் வெளியாகும் இன்னொரு அரச ஊடகத்துக்கு நாட்டின் கொவிட் 19 கட்டுப்பாட்டு உயர் நிர்வாகி அதேபோன்ற செய்தியைத் தெரிவித்திருக்கிறார். ஒமெக்ரோன் திரிபு பரவியதால் சீனா தனது கொவிட் 19 நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்கிறார் அவர். 

சீனாவின் நடவடிக்கைகளை அவதானித்து வருபவர்களும் சீனா இவ்வருடம் முழுவதும் நாட்டைச் சகஜ நிலைக்கு வர அனுமதிக்கப் போவதில்லை என்றே குறிப்பிடுகிறார்கள். அதற்கான உப காரணம் சீனா கொம்யூனிஸ்ட் கட்டியின் முக்கிய மாநாடு ஒன்றை இலையுதிர் காலத்தில் நடத்தத் தீர்மானித்து இருப்பதுமாகும் என்கிறார்கள் அவர்கள்.

கொவிட் 19 கட்டுப்பாடுகளும், அதீத கண்காணிப்புக்களும் சீன அரசுக்குத் தனது மக்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்குள்ளும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இன்னொரு காரணமாகச் சீனாவின் தடுப்பு மருந்து ஒமெக்ரோன் திரிபை எதிர்ப்பதில் பெருமளவு தோல்வியடைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஹொங்கொங்கில் சீனாவின் தடுப்பு மருந்தை எடுத்தவர்களிடையே நடந்த ஆராய்ச்சியொன்றில் அது தெரியவந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்