ஐரோப்பிய ஒன்றியம் என்ற வகுப்பில் தடுப்பூசி போடுவதில் மோசமான மாணவன், பல்கேரியா.

கையில் தேவையானவை போக மில்லியன் கணக்கில் அதிக தடுப்பு மருந்துகளை வைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஏற்கனவே 70 விகிதமான குடிமக்களுக்கு இரண்டு தடுப்பு மருந்துகளையும் கொடுத்திருக்கிறது. விதிவிலக்காக இருக்கும் சில நாடுகளில் அந்த விகிதம் குறைவு. அதிலும் பல்கேரியாவிலோ மிகக் குறைவு. சுமார் 18 % மக்களே இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருக்கும் நாடு பல்கேரியா.

“நாம் இதேபோலத் தொடர்ந்தும் ஐரோப்பாவின் முட்டாள்களாக நடந்துகொள்வோமானால் எங்கள் பொருளாதாரத்துக்கும், சுற்றுலாத்துறைக்கும் மரண அடி விழுவதைத் தடுக்க முடியாது, என்கிறார் நாட்டின் மக்கள் ஆரோக்கிய உயரதிகாரி ஏங்கல் குஞ்சேவ். 

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பேரைக் கொவிட் 19 க்குப் பறிகொடுத்த நாடுகளில் பல்கேரியா மூன்றாவது இடத்திலிருக்கிறது. ஆனாலும், தடுப்பூசிச் சந்தேகிகள் அங்கே அதிகம். அவை பற்றிய பொய்ச் செய்திகளையே அங்கே பலரும் நம்புகிறார்கள் அல்லது விபரங்களைத் தெரிந்துகொள்வதில்லை. பல மருத்துவர்களே கூட தடுப்பூசி போடுவது அவசியமில்லையென்று நினைக்கிறார்கள்.

“இதே வேகம் தொடருமானால் அடுத்த கோடையளவில் இங்கே 20 – 30 % மக்களே தடுப்பூசிகளிரண்டையும் போட்டுக்கொண்டிருப்பார்கள். சுற்றுலாவுக்கு இங்கே எவரும் வரப்போவதில்லை,” என்கிறார் ஏங்கல் குஞ்சேவ்.

பல்கேரியாவின் தடுப்பு மருந்துகள், கொரோனாக் கட்டுப்பாடுகள் பற்றிய விபரங்களை அரசே கையாள்கிறது. ஏங்கல் குஞ்சேவ் அரசிடம் நாட்டு மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டுவரவேண்டும் என்று பல தடவைகள் வேண்டிக்கொண்டும் அரசு அந்த வழியை எடுக்கவில்லை.

தன்னிடமிருக்கும் தடுப்பு மருந்துகள் பாவிக்கப்படாததால் செப்டெம்பரில் காலாவதியாகக்கூடிய 320,000 மருந்துகளை பொஸ்னியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது பல்கேரியா. மேலும் 100,000 தடுப்பூசிகளை நோர்வேக்கு விற்றிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *