இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கூட்டி மாநாடு நடத்தப்போகிறது கத்தார்.

உக்ரேன்- ரஷ்யா முறுகல்களால் ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ள வெவ்வேறு துணைகளைத் தேடுகிறார்கள். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கணிசமான அளவு எரிவாயுவை விற்றுவரும் ரஷ்யா உக்ரேனுடன் போரில் இறங்குமானால் ஐரோப்பாவுக்கான எரிவாயுக் குளாய்களை இறுக மூடிவிடலாம் அல்லது ஐரோப்பாவே ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்த முடிவுசெய்யலாம். அவ்விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதாக உறுதிகூறியிருக்கிறார் ஜோ பைடன். அதற்காக அவர் கத்தாரிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். 

கத்தாரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் Gas Exporting Countries Forum எனப்படும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒன்றியம் 11 அங்கத்துவர்களையும் மேலும் 7 நாடுகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுகிறது. திரவ எரிவாயுவை ஏற்றுமதி செய்வதில் 51 % ஐயும் உலகின் மொத்த எரிவாயு இருப்புக்களில் 70 % ஐயும் அந்த நாடுகளே கொண்டிருக்கின்றன.

கத்தாரைத் தவிர ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் அவ்வமைப்பின் முக்கிய நாடுகளாகும். அமெரிக்கா, ஆஸ்ரேலியா ஆகியவையும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகள், ஆனால், அவ்வமைப்பில் அங்கத்துவர் அல்லாதவை. பெப்ரவரி 22 ம் திகதிக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் மாநாட்டில் ரஷ்யா கலந்துகொள்ளுமா என்பது கேள்விக்குறியே. 

சாள்ஸ் ஜெ. போமன்