ரஷ்யாவுக்கெதிராக ஒருமுகப்படுத்தலின் பின் சீனாவுக்கெதிரான ஒருமுகப்படுத்தலுக்காக பிளிங்கன் ஆஸ்ரேலியப் பயணம்.
பசுபிக் பிராந்தியத்தில் தனது டிராகன் சிறகுகளை விரிக்கும் சீனாவை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட நான்கு நாடுகளின் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் ஆஸ்ரேலியாவை நோக்கிப் பயணமானார். மெல்போர்னின் மூன்று நாட்கள் தங்கி அவர் ஜப்பான், இந்தியா, ஆஸ்ரேலியப் பிரதிநிதிகளைச் சந்திக்கவிருக்கிறார்.
“அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்து அரசியலுக்கும் வெளிவிவகார, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களிலும் Quad அமைப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அந்த அமைப்பின் கூட்டுறவுடனேயே நாம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பையும், கட்டாயப்படுத்தலையும் எதிர்நோக்கிப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறோம்,” என்று பிளிங்கனின் பயணம் பற்றி வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.
ஜேர்மனியின் தலைவர் உலொவ் ஷுல்ட்ஸைச் சந்தித்து உக்ரேன் – ரஷ்ய அரசியல் நிலைமை பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்திய ஜனாதிபதி ஜோ பைடன் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஐரோப்பாவுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்,” என்று அறிவித்த சில மணிகளின் பின்னர் பிளிங்கனின் ஆஸ்ரேலியப் பயணம் ஆரம்பமாகியது.
ஆஸ்ரேலியாவிலிருந்து திரும்பும் வழியில் பிளிங்கன் பிஜியில் ஒரு நிறுத்தம் செய்வார். சீனாவினால் ஏற்கனவே பல விடயங்களில் வற்புறுத்தல்களுக்கு உண்டாக்கப்பட்டிருக்கும் பசுபிக் தீவுகளினால் அடங்கிய நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகளை அவர் அங்கே சந்திப்பார்.
சாள்ஸ் ஜெ. போமன்