குடும்பத்துக்குள் வன்முறைக்கான தண்டனையைக் கடுமையாக்க முயற்சிக்கும் எகிப்திய அரசுக்கு எதிர்ப்பு.

அமல் சலமா என்ற எகிப்தியப் பாராளுமன்ற உறுப்பினர் தம்பதிகளுக்குள் நடக்கும் வன்முறைக்கான தண்டனையை தற்போது இருக்கும்  வருடத்திலிருந்து 3 – 5  வருடச் சிறையாக உயர்த்தவேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும் மனைவிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று முக்கியத்துவம் வாய்ந்த எகிப்திய இமாம் ஒருவர் 2019 இல் குறிப்பிட்டது சரியானதா என்பது பற்றிய பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

எகிப்தில் 2019 இல் 226,000 விவாகரத்துக்கள், 2020 இல் 213,000 விவாகரத்துக்கள் நடந்திருக்கின்றன. நாட்டின் குடும்ப நல அமைச்சின், பெண்கள் நிலை பற்றிய ஆராய்வில் 86 % பெண்கள் எகிப்தில் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான விவாகரத்துக்களில் குடும்பத்துக்குள்ளான வன்முறை காரணமாகக் காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டியே அமல் சலமா அந்தச் சட்டத் திருத்தத்தை முன்வைத்திருக்கிறார்.

அல் – அஸார் என்ற எகிப்தின் இஸ்லாமிய உயர் பீடத்தின் தலைமை இமாம் அஹ்மத் அல் – தாயிப் 2019 இல் ரமழான் பெருநாளை ஒட்டி வெளியிட்ட நிகழ்ச்சியொன்றில் குரானை ஆதாரம் காட்டி “…கணவர் ஒருவர் அடித்துத் தான் மனைவியைத் திருத்தவேண்டிய நிலைமை வந்தால், எலும்புகள் உடையாமல், அங்கங்களெதுவும் பாதிக்கப்படாமல் தண்டிக்கலாம்.” என்று விளக்கியிருந்தார். 

சமீப நாட்களில் இமாம் அஹ்மத் அல் – தாயிப் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் எகிப்திய மற்றைய இஸ்லாமிய உயர் புள்ளிகளால் தனது 2019 ம் ஆண்டு உரைக்காகக் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அதன் விளைவாக எகிப்தில் இஸ்லாமிய அறிஞரான இமாம் அஹ்மத் அல் – தாயிப் சொல்வது பிழையாகுமா, அவர் ஷரியாச் சட்டத்தில் இருப்பதாக விளக்கியிருப்பதை சாதாரண அரசியல்வாதிகள் எதிர்க்கலாமா என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்