தம்மிடம் இருந்த ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்களைப் பிரித்துக் கொடுத்தார் ஜோ பைடன்.
தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவுக்குப் போகவேண்டிய சொத்துக்கள் போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது அமெரிக்கா. கடந்த வருட இறுதியில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய சமயத்தில் வெளிநாடுகளிலிருந்த அந்த நாட்டின் சொத்துக்களை அமெரிக்கா தடுத்துவைத்தது. பணம், தங்கம், சொத்துக்களாக இருக்கும் அத்தொகைக்குத் தலிபான்கள் உரிமை கோரியதை அமெரிக்கா மறுத்துவிட்டது.
வெள்ளியன்று ஜோ பைடன் கையெழுத்த கோப்புக்களிலொன்று ஆப்கானிஸ்தானுக்குரிய 7 பில்லியன் டொலர்களை எப்படிப் பகிர்வது என்பது பற்றியதாகும். பாதித் தொகையை ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்கள் பெறுகின்றன. இன்னொரு பகுதி ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப்படும்.
செப்டெம்பர் 11 தாக்குதலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கக் குடும்பத்தினர் நீண்ட காலமே அதற்கான நஷ்ட ஈட்டைக் கோரி வந்தனர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் மீண்டும் அக்கோரிக்கைகள் பலமாக எழுந்ததை எதிர்கொண்டே அமெரிக்க ஜனாதிபதி அந்த முடிவை எடுத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலைமை படு மோசமாகிக் கடும் பஞ்சம் நிலவி வருவதாகப் பல ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவும் மனிதாபிமான அமைப்புக்களுக்குப் பொருளாதார நிதியைக் கொடுக்கவிருக்கிறது அமெரிக்க அரசு. அவ்வுதவிகள் தலிபான்களுக்கு எட்டாமல் உதவி தேவையானவர்கள் கையிலேயே சேரும் என்று அமெரிக்க அரசு உறுதியாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்