உக்ரேன் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்குக் காப்புறுதி இனி கிடையாது.

உக்ரேனுக்குள் விரைவில் ரஷ்ய இராணும் புகுந்து நாட்டைக் கைப்பற்றும் என்ற எச்சரிக்கைகள் மணிக்கு மணி தீவிரமாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு ஒற்றை இராணுவ வீரரையும் அனுப்பாமலே ரஷ்யா தான் எதிர்பார்த்தபடி உக்ரேனை நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது. உக்ரேனில் போர் மூளலாம் என்ற பயத்தில் அங்கிருந்த வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வர நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் அமெரிக்கா தனது குடிமக்களை உக்ரேனிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. அதையடுத்து மற்றைய நாடுகளும் தமது நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வேண்டிக்கொள்கிறார்கள். அப்படியான வேண்டுகோள்களைத் தவிர்க்கும்படி தமது நேச நாடுகளை உக்ரேன் கேட்டுக்கொண்டாலும் எவரும் செவிமடுக்கவில்லை.

அமெரிக்கா எச்சரிப்பது போல ரஷ்ய இராணுவத்தினர் தமது படைகளை உக்ரேனை நோக்கி நகர்த்தவில்லை என்கிறார், உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிஸ் ஸெலென்ஸ்கி. 

“இது எங்கள் எல்லை, எங்களது பிராந்தியம். எங்களிடம் சொந்தமாக உளவுப் படைகள் இருக்கின்றன. நாட்டுக்குள் ஏற்படக்கூடிய சீரற்ற நிலைமையே எமது முக்கிய எதிரி. இப்படியான எச்சரிக்கைகள் எங்களுக்கு நன்மை செய்யக்கூடியவை அல்ல,” என்கிறார் அவர்.

உக்ரேனிலிருந்து நிலைமையைக் கண்காணித்து வரும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அங்கே வாழும் மக்களிடையே சகஜ நிலைமையே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். ரஷ்யாவுடன் கலாச்சார, சரித்திர ரீதியில் நெருக்கமான உறவு கொண்டுள்ள அவர்கள் ரஷ்யா தங்களைத் தாக்கும் என்று இன்னும் நம்பவில்லை. தாக்கினாலும், ரஷ்யாவைத் தம்மால் தடுக்க முடியும் என்றும், போரில் ரஷ்யாவால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

பொருளாதார ரீதியிலோ உக்ரேன் ஏற்கனவே பெரிய அடி வாங்கியிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை நிறுத்திவிட்டிருக்கின்றன. தமது கஜானாக்களை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அகற்றிவிட்டிருக்கின்ரன. உக்ரேனுக்குக் கடன் கொடுப்பவர்கள் தமது வட்டி விகிதத்தை 25 % க்கும் அதிகமாக்கியிருக்கிறார்கள்.

பரந்த நிலப்பிராந்தியத்தைக் கொண்ட உக்ரேனின் வான்வெளி விமானப் போக்குவரத்துக்களால் நிறைந்தது. அவ்வழியே பறக்கும் விமானங்களுக்குப் பெரும் ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி கொடுக்கும் நிறுவனங்களுக்கான உத்தரவாதம் கொடுக்கும் பெரிய காப்புறுதி நிறுவனம் லொய்ட்ஸ் ஆகும். அந்த பிரிட்டிஷ் நிறுவனம் பெப்ரவரி 14 முதல் உக்ரேன் வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கான காப்புறுதிக்கு உத்தரவாதம் கொடுப்பதில்லை என்று அறிவித்து விட்டது. 

சர்வதேச விமானங்கள் உக்ரேனுக்கு மீதாகப் பறப்பதை இனிமேல் எவரும் காப்புறுதி செய்யப்போவதில்லை. உக்ரேன் தனது வான்வெளியைப் பூட்டிவிடப் போவதில்லை என்றும் அவ்வழியாகப் பறக்கும் விமானங்களுடைய பாதுகாப்புக்கும் உறுதியளித்திருக்கிறது. ஆனாலும், காப்புறுதி செய்யாத விமானங்களை அவ்வழியால் எவரும் போக்குவரத்துக்குப் பாவிக்கப்போவதில்லை. உக்ரேனின் நீர்ப்பரப்புக்கும் அதே நிலைமை வரலாம். போக்குவரத்துக் கப்பல்களுக்குக் காப்புறுதியளிக்கும் விரைவில் உக்ரேன் நிலைமை பற்றிக் கூடவிருக்கிறது. அச்சமயத்தில் அவர்கள் உக்ரேனையடுத்த நீர்ப்பரப்பு பாதுகாப்பு அற்றது என்று அறிவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதேசமயம், அதே விதமான முடிவுகள் ரஷ்ய வான்பரப்புப் பற்றியோ, ரஷ்யாவின் பொருளாதார நிறுவனங்கள் பற்றியோ எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, ரஷ்யா மீது பல தடைகளை மேற்கு நாடுகள் போட்டிருப்பினும் நிஜத்தில் அவை ரஷ்யாவைப் பாதிப்பதை விட உக்ரேனை மோசமாகப் பாதித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்