மனையாளின் மனவிருப்பு

மழையுண்ட நிலமாக
மலைகண்ட முகிலாக
மணங்கொண்ட என்னவனே
மடைதிறந்தேன் கேட்டிடுவாய்

மண்மீது உயர்வுபெற
மனைவாழ உழைப்பவனே
மனையாளின் மனவிருப்பை
மறவாமல் அறிந்திடுவாய்

மக்கள்நலம் நிலைபெற
மருந்துலகில் துய்ப்பவனே
மகவென உனைநினைந்தே
மதித்திடுவேன் நீமறவாய்

மனைமாட்சி வழிமுறையில்
மகளாட்சி அதிகாரத்தில்
மகனாட்சி செயல்திறனில்
மனசாட்சி உரைத்திடுவாய்

மங்காத அறிவுபெற
மலைநாட்டு மங்கையிவள்
மரபுத்தமிழ் பழகிடவே
மதிப்பளித்து போற்றிடுவாய்

மதுமாது சூதுவாது
மறுத்துவாழும் நாயகனே
மனைவியிவள் உனக்கிணையே
மருளாமல் ஏற்றிடுவாய்

மருதாணி நானிட்டு
மல்லிகை நீசூட்ட
மங்களம் நிலைத்திடவே
மறையோனை வேண்டிடுவாய்

மறைமாலை கருக்கையில்
மதியொளி பொழிகையில்
மவுனமெங்கும் நிலைக்கையில்
மஞ்சத்தில் கொஞ்சிடுவாய்

மடிமீது தலைக் கிடத்தி
மார்மீது கைப்பரத்தி
மயில்பீலி விசிறிட்டு
மயிர்க்கோத கண்ணயர்வாய்

மலரழகு முகந்தன்னை
மணிவிழிகள் இரசித்தபடி
மனதுக்கு இதமூட்ட
மழலையாய் புன்சிரிப்பாய்

மன்னவன்நீ அமைதியுற
மலர்ந்த விழித்துயில
மகிழ்வூட்டத் தாலாட்டுவேன்
மயங்குறங்கி ஓய்வெடுப்பாய்

மதியாயிரம் காணாடினும்
மனமொத்த காதலினால்
மண்ணில்வாழ் நாள்வரை
மனம்பிரியா மகிழ்ந்திடுவாய்

எழுதுவது:
அகிலா பொன்னுசாமி
சபா, மலேசியா.